'மின்சாரத்தைக் கேட்டால் டாஸ்மாக்கை திறக்கிறார்கள்'- அதிகாரிகளுக்கு எதிராகக் கொந்தளித்த மக்கள்

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 200 -க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

                                                                 

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள நரசிங்கம்பாளையம் கிராமத்தில், புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்காக அதிகாரிகள் இடம் தேர்வுசெய்து பணிகள் நடைபெற்றுவருகின்றன. இதை அறிந்த கிராமப் பொதுமக்கள், அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 150-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் காட்டுமன்னார்கோயில் - ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், டாஸ்மாக் கடை தங்கள் பகுதியில் திறக்கப்பட மாட்டாது என உறுதி அளித்ததின் பேரில் மறியலைக் கைவிட்டுக் கலைந்துசென்றனர். இந்த மறியலால் ஜெயங்கொண்டம் சாலையில் ஒரு மணிநேரத்துக்கும் மேல் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "எங்கள் பகுதியில் மின் இணைப்பு கேட்டு பல மாதங்களாக மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்த அதிகாரியும் சம்பவ இடத்துக்கு வருவதுமில்லை; மின்சாரம் வழங்கியபாடும் இல்லை. ஆனால், டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்பதற்காக பல கிராமங்களில் இடம் கிடைக்குமா என்று தினமும் அலைந்துதிரிந்து கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள். இது எவ்வளவு வேதனையான விஷயம். மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கேட்கிறோம். ஆனால், இந்த அரசு மக்களைக் குடிக்கவைக்க இடம் தேடுகிறது. எங்களையும் மீறி டாஸ்மாக் கடை இப்பகுதியில் திறந்தால், கடையை துவம்சம் செய்வோம்" என்று கொந்தளித்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!