வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (24/10/2017)

கடைசி தொடர்பு:07:40 (24/10/2017)

கன்னியாகுமரியில் நவம்பர் 15 முதல் சீசன் ஆரம்பம்!

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், ஆண்டுக்கு இருமுறை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். அதில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தொடங்கி மகரவிளக்கு முடியும்வரை உள்ள நாள்களில், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இரண்டாவது வாரம் தொடங்கி ஜனவரி மாதம் முடிய தொடரும்.  அந்தக் காலகட்டத்தில் கன்னியாகுமரி சிறப்புநிலைப் பேரூராட்சி சார்பில், வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காகப் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

கன்னியாகுமரி வரும் பயணிகள் மற்றும்  பக்தர்கள் பொருள்கள் வாங்க வசதியாக, நடைபாதைக் கடைகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கும். இதை சீசன் கடைகள் என்றும் அழைப்பார்கள். இந்தக் கடைகள், நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் இறுதி வரை செயல்படும். கன்னியாகுமரி சன்னதி தெரு, பழைய பஸ் நிலையம், கடற்கரைச் சாலை, காந்தி மண்டபம் சாலை, சன்செட் பாயின்ட் வரை இருக்கும். சுமார் 600 -க்கும் அதிகமான கடைகள் அமைக்கப்படும். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகள் மட்டுமன்றி, வடமாநில வியாபாரிகளும் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வார்கள். இந்த சீசன் கடைகளை வைத்துக்கொள்ள, கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகத்திடம் வியாபாரிகள் முன் அனுமதி பெற வேண்டும். இதை அவர்கள், ஏலம் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 20 -ம் தேதி வரை சீஸன் கடைகள் வைத்துக்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான ஏலம், வரும் 9-ம் தேதி நடக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க