வெளியிடப்பட்ட நேரம்: 06:50 (24/10/2017)

கடைசி தொடர்பு:07:45 (24/10/2017)

திருப்பூரில் உணவக ஊழியர் கொலை..! - காவல்துறையினர் விசாரணை!

திருப்பூரில் இயங்கிவரும் பிரபல தனியார் உணவகத்தில் பணியாற்றி வந்த ஊழியர், இன்று மர்மமான முறையில் விடுதி அறையில் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். 19 வயதான இவர், கடந்த ஒரு மாதமாக திருப்பூரில் உள்ள பிரபல தனியார் உணவு விடுதியில்  பணியாற்றிவந்துள்ளார்.  இவர் பணியாற்றும் உணவகத்துக்குச் சொந்தமான, தொழிலாளர் தங்கும் விடுதி
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதியில் அமைந்திருக்கிறது. தன்னுடன் பணியாற்றும் தமிழக மற்றும் வட மாநிலத் தொழிலாளர்களுடன் சேர்ந்து வசித்துவந்த ராஜேஷ், இன்று மதியம் மர்மமான முறையில் மரணமடைந்திருக்கிறார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், ராஜேஷின் மர்ம மரணம்குறித்து தொடர் விசாரணையில் ஈடுபடத் துவங்கினர். அப்போது, உயிரிழந்த ராஜேஷுடன் அறையில் ஒன்றாகத் தங்கியிருந்த அஜித் மற்றும் தீபன் ஆகிய இருவரின் செல்போனும் கடந்த 2 நாள்களுக்கு முன்னர் காணாமல்போனது தெரியவந்திருக்கிறது. எனவே, அதுதொடர்பாக அந்த விடுதியில் தங்கியிருந்த நபர்கள் அனைவரிடத்திலும் செல்போனைப் பறிகொடுத்த அஜித்தும், தீபனும் விசாரித்திருக்கிறார்கள். அப்போது, அந்த விடுதிக்குப் புதிதாக வந்து சேர்ந்திருந்த ராஜேஷின் மீது தீபன், பரணி மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

அதைத்தொடர்ந்து, ராஜேஷை கடந்த 2 நாள்களாக அவர்கள் விடுதியிலேயே வைத்து விசாரித்த மூவரும், ராஜேஷை உடல்ரீதியாக தாக்கியும் இருக்கிறார்கள். தொடர்ந்து கடுமையான தாக்குதலுக்கு ஆளானதால் விடுதி அறையிலேயே இன்று உயிரிழந்திருக்கிறார் ராஜேஷ்.  சம்பவம் தொடர்பாக, திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் கொலை வழக்குப் பதிவுசெய்யப்பட்டு, தீபன், பரணி, சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்திவருகின்றனர் காவல்துறை அதிகாரிகள்.