பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டியாக பிஸ்கட்! - புதுச்சேரி முதல்வரின் புதிய திட்டம்

புதுச்சேரியில், அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டியாக பிஸ்கட் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.

புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரியில், கடந்த 2002-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது, முதல்வர் ரங்கசாமியின் முயற்சியால் இந்தியாவிலேயே முதல் முறையாக  பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் மற்றும் பிஸ்கட் வழங்கும் திட்டம், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி தொடங்கிவைத்தார். இதனிடையே, புதுச்சேரி அரசின் கடும் நிதிப் பற்றாக்குறை காரணமாக, கடந்த 2013-ம் ஆண்டு இந்தத் திட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பின்னர் சில மாதங்கள் கழித்து, பால் மட்டும் வழங்க முடிவுசெய்யப்பட்டு, தற்போது பிரிகேஜி முதல் 12-ம் வகுப்பு வரை காலை நேரத்தில் சூடான பால் வழங்கப்பட்டுவருகிறது.

புதுச்சேரி முதல்வர்

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியாக, பிஸ்கட் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை தீவிரமாக முயற்சிசெய்துவந்தது. அதனடிப்படையில், தற்போது முதல்கட்டமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டியாக பிஸ்கட் வழங்கும் திட்டத்தை ஐயங்குட்டிபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்.  பெங்களூரைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்தின்மூலம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 210 தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 19,800 மாணவர்களுக்கு வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்களுக்கு மட்டும் முதல் கட்டமாக இலவச பிஸ்கட் வழங்கப்பட உள்ளது. பின்னர், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கும் திட்டம்  விரிவுபடுத்தப்பட உள்ளது. மேலும், இந்தத் திட்டம் முற்றிலும் தனியார் தொண்டு நிறுவன நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!