வெளியிடப்பட்ட நேரம்: 13:45 (24/10/2017)

கடைசி தொடர்பு:13:45 (24/10/2017)

கலெக்டர் அலுவலக வளாகத்தில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் கொசுமருந்து தெளிப்பான்கள்!


             

தமிழ்நாட்டில், ஒவ்வொரு நாளும் பரபரப்பாகப் பேசப்பட்டுவருவது, 'மெர்சல்' பட விவகாரமும் தமிழ்நாடு முழுக்க மரண பீதியை அள்ளி வழங்கும் டெங்குவும்தான். தினமும் டெங்கு பாதிப்பால் சிறுவர்கள் தொடங்கி முதியவர்கள் வரை இறக்க, எது டெங்கு காய்ச்சல் எது சாதாரண காய்ச்சல் என்று இனம் கண்டறிய முடியாமல் உயிர் பயத்தில் மக்கள் அல்லாடுகிறார்கள்.

தமிழ அரசும், தமிழக சுகாதாரத்துறையும் ஒப்புக்கு ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் நடத்துவதாக சமூக ஆர்வலர்கள் புலம்பத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழக அரசு,"டெங்கு பாதிப்பால் இறந்தவர்கள் சிலரே என்றும் டெங்கு தடுப்புப் பணிகளும் விழிப்புஉணர்வு நிகழ்ச்சிகளும் தமிழ்நாடு முழுக்க குக்கிராமங்கள் வரை செய்யப்படுகின்றன' என்று சப்பைக்கட்டு கட்டிவருகிறது. இந்நிலையில், கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சுகாதார சங்க அறையில், கொசுமருந்து தெளிப்பான்கள் பல பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன. 

இதுபற்றி நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர்,  "இந்தக் கட்டடத்தில், 20-க்கும் மேற்பட்ட கொசுமருந்து தெளிப்பான்கள் மூன்று மாதங்களுக்கும் மேலாக சும்மாவே கிடக்கு. கட்டடம் வேறு திறந்துகிடப்பதால், இந்தத் தெளிப்பான்கள் திருடுபோகவும் வாய்ப்பிருக்கிறது. அதில் பாதிக்கு மேல் துருபிடிச்சு பயன்படுத்த முடியாத சூழலுக்குப் போயிட்டுது. தமிழகமே டெங்கு பீதியில் இருக்கும் இந்த நேரத்தில், இந்த கொசுமருந்து தெளிப்பான்களை பயன்படுத்தலன்னா, வேறு எப்போ பயன்படுத்தப் போறாங்க? இப்போது, கரூர் மாவட்டத்தில் டெங்கு பீதி அதிகமாகியுள்ளது. மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ், டெங்கு தடுப்புப் பணிகளை மாவட்டம் முழுவதும் சிறப்பாகச் செய்துட்டுவருகிறார். ஆனால் அடுத்தகட்டமாக, அதிகாரிகள் டெங்கு தடுப்பு பணிகளில் கலெக்டர் வேகத்துக்கு ஈடுகொடுக்காமல், மந்தமாகவே இருக்கிறார்கள். இவர்களால் மாவட்ட ஆட்சியருக்குதான் கெட்ட பெயர்.  எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த கைத்தெளிப்பான்களைப் பயன்படுத்த வேண்டும். மந்தமாகச் செயல்படும் அதிகாரிகளை இனம் கண்டு, அவர்களின் பணி வேகத்தை முடுக்கிவிட வேண்டும். அப்போதுதான், டெங்கு ஒழிப்பு பணி 100 சதவிகிதம் வெற்றியைத் தரும்" என்றார்.