‘மோதல் வலுக்கும் ஓ.பி.எஸ். இ.பி.எஸ் ஆதரவாளர்கள்!’ - வேடிக்கைபார்க்கும் தினகரன் #VikatanExclusive | Clash between Edappadi palanisamy and paneerselvam cadres - Dinakaran remains silent

வெளியிடப்பட்ட நேரம்: 15:12 (24/10/2017)

கடைசி தொடர்பு:16:17 (24/10/2017)

‘மோதல் வலுக்கும் ஓ.பி.எஸ். இ.பி.எஸ் ஆதரவாளர்கள்!’ - வேடிக்கைபார்க்கும் தினகரன் #VikatanExclusive

 எடப்பாடி பழனிசாமி

ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கைகோத்தாலும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கிடையே மோதல் இன்னமும் தொடர்கிறது. ஒப்பந்தப் பணிகள் தொடங்கி, கட்சிரீதியான நடவடிக்கைகள் வரை இருதரப்பினரும் வெளிப்படையாகவே முட்டிமோதும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்துவருகின்றன. 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவால் தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர். சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தீபா என அணிகள் உதயமாயின. ஆனால், தேர்தல் ஆணையம், சசிகலா தரப்பினருக்கு அ.தி.மு.க. அம்மா அணி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி என்று அறிவித்தது. சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்பினர் சசிகலா, தினகரனுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே, சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாத ஓ.பன்னீர்செல்வம் அணியினர், தர்மயுத்தம் நடத்தினர். தர்மயுத்தத்தின் கோரிக்கைகளை ஏற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினர், நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் கடந்த செப்டம்பரில் இணைந்தனர். அதன்பிறகு, இருதரப்பினரும் செப்டம்பர் 12-ம் தேதி பொதுக்குழுவை நடத்தி சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்ததோடு, அவரால் நியமிக்கப்பட்ட நியமனங்களும் செல்லாது என்று அதிரடியாகத் தீர்மானம் நிறைவேற்றினர்.

சசிகலா அணியிலிருந்த எடப்பாடி பழனிசாமியை, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடுமையாக விமர்சித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் கண்டித்துப் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். ஆட்சியிலும் கட்சியிலும் பதவிகளைப் பங்கிட்ட பிறகும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு இடையிலான மோதல் இன்னும் தொடர்கதையாக இருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

தற்போது, தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க, அ.தி.மு.க அணிகள் போராடிவருகின்றன. அதிலும், எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் ஒருங்கிணைந்து செயல்படுவதில் சிக்கல்கள் இருப்பதாக விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். ஏனெனில், எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்த பிறகு, சின்னத்தை எளிதில் மீட்டெடுத்துவிடலாம் என்று கருதப்பட்டது. ஆனால், சசிகலா தரப்பு வைக்கும் விவாதங்களால் சின்னம் கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

 ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் கைகுலுக்கிய பிறகு, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் ஒரே மேடையை இருவரும் அலங்கரித்துவருகின்றனர். ஜெயலலிதாவைப் போல குட்டிக்கதைகளைச் சொல்ல எடப்பாடி பழனிசாமி தவறுவதில்லை. ஓ.பன்னீர்செல்வமும் தனக்கே உரிய பாணியில் பேசிவருகிறார். இரண்டு தரப்பின் தலைமை ஒற்றுமையாக இருப்பதைப் போல காட்டிக் கொண்டாலும், பல பழைய சம்பவங்கள் உள்ளுக்குள் நீறுபூத்த நெருப்பாக புகைந்துகொண்டிருக்கின்றன.

இரண்டு தரப்பினரின் கோரிக்கைகள், பேச்சுவார்த்தைமூலம் தீர்வு காணப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், ஒப்பந்தப் பணிகள், அதிகாரம் ஆகியவற்றைப் பங்கிடுவதில் பிரச்னைகள் தொடருவதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. சில நாள்களுக்கு முன்பு நடந்த ஆண்டு விழாவில், எம்.பி ஒருவருக்கும், கட்சியின் மூத்த நிர்வாகிக்கும் இடையே நடந்த காரசாரமான விவாதம், கட்சியினரைக் கலவரப்படுத்தியுள்ளது. அது, ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படமில்லாமல் ஒட்டப்பட்ட போஸ்டர் விவகாரம் என்று கட்சியினர் தெரிவிக்கின்றனர். அதன்பிறகு எம்.பி, கட்சியின் மூத்த நிர்வாகியை அங்குள்ளவர்கள் சமாதானப்படுத்தியுள்ளனர். அதுபோல, வக்பு போர்டு விவகாரமும் இருதரப்பினருக்கு மிடையே கடும் விவாதமாகியிருக்கிறதாம். முதல்வர்  டிக் அடித்தவருக்குத் தலைவர் பதவி கொடுக்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளதாம். வக்பு விவகாரம் நீதிமன்றத்தின் படியேறியுள்ளது. இதனால், இருதலைக் கொல்லி எறும்பாக எடப்பாடி பழனிசாமி அணியிலிருக்கும் அமைச்சர் ஒருவர் தவித்துவருகிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், "சசிகலா, தினகரனுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உறுதியளித்த பிறகே இணைந்தோம். அதன்படி, பொதுக்குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, அந்தத் தீர்மானம் தேர்தல் ஆணையத்திடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியை வழிநடத்த ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்பட்டு, அதில் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிசாமி துணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சசிகலா பரோலில் வந்த சமயத்தில், அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேச்சு பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை ஒருவழியாக முடிவுக்குக் கொண்டுவந்த பிறகும் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து மன்னார்குடியின் பாசம் அவ்வப்போது வெளிப்பட்டுவருகிறது. குறிப்பாக, சசிகலா சென்னையிலிருந்தபோது, அது நிரூபணமானது. ஆனால், அதை எடப்பாடி பழனிசாமி தரப்பு மறுத்தது. மேலும் கட்சி, ஆட்சிரீதியாக எடுக்கப்படும் சில முக்கிய முடிவுகள், எங்களிடம் கலந்து ஆலோசிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் ஆரம்பத்திலிருந்தே இருந்துவருகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று தினகரனை ஆதரித்த எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரிடம் புகார் கொடுத்த சமயத்தில், ஆட்சிக்குச் சிக்கல் ஏற்பட்டது. அப்போது, நாங்கள் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுத்ததால், ஆட்சிக்கு ஏற்பட்ட சிக்கல் தற்காலிமாகத் தள்ளிப்போடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் எம்.எல்.ஏ தகுதிநீக்க வழக்கில் தினகரனுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தால், ஆட்சிக்கு நிச்சயம் சிக்கல் ஏற்படும். அதைச் சமாளிப்பது தொடர்பாக முதல்வர் தரப்பு கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. மேலும், எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருக்கும் சில அமைச்சர்கள், பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள், தங்களுக்கு வேண்டியதை மட்டுமே கவனிக்கின்றனர். குறிப்பாக, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் எங்கள் அணியிலிருக்கும் நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதுவரை நடந்த விழாவைவிட சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே தெரிந்தது.

OPS-EPS

எங்கள் அணியைச் சேர்ந்தவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதில்லை. குறிப்பாக, ஆசிரியர்கள் இடமாறுதல் விவகாரத்தில்கூட நாங்கள் கொடுத்த பட்டியல் கண்டுகொள்ளப்படவில்லை. அடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு வந்தவுடன் பிரச்னை பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. அவைத் தலைவர் மதுசூதனனை வேட்பாளராக நிறுத்தும்படி தெரிவித்ததை, எடப்பாடி பழனிசாமி தரப்பினரில் பலர் விரும்பவில்லை. மதுசூதனனுக்கு நேரடியாகவே அமைச்சர் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்தார். அ.தி.மு.க-வில் நடக்கும் உள்விவகாரங்கள்குறித்து டெல்லியில் விரிவாக எடுத்துச் சொல்லியுள்ளோம். அங்கிருந்து கிடைக்கும் சிக்னலுக்குப் பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றனர். 

எடப்பாடி பழனிசாமி தரப்பில், மூத்த நிர்வாகி ஒருவரைத் தொடர்புகொண்டோம். அணிகள் இணைந்த பிறகு, நிர்வாகிகளிடையே பிரச்னைகள் இருப்பது உண்மைதான். ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு அமைச்சரவையில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், தற்போதைய அரசியல் சூழ்நிலையில், அமைச்சரவை மாற்றம் என்பது இயலாத காரியம். குடும்பம் என்றால், ஆயிரம் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், அதை அரவணைத்துச் செல்லவேண்டியது குடும்பத் தலைவரின் பொறுப்பு. ஆனால், அ.தி.மு.க குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு, ஒருவரின் கையில் இல்லை. அந்தப் பொறுப்பு, குறிப்பிட்ட சிலருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்சியை ஊழல் என்று குற்றம் சாட்டிய ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள சிலரது நடவடிக்கைகள் இன்றும் மாறவில்லை. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் எங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து சிலர் சொல்லிவருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி மற்றும் கொங்கு மண்டல டீம் சமாளித்து, கட்சியைக் கட்டுக்கோப்புடன் கொண்டுசெல்ல, முடிந்த அளவு போராடிவருகிறோம்.

சிவகாசி நூற்றாண்டு விழாவில் நடந்த சம்பவத்தைப் பெரிதுப்படுத்தி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பேசுகின்றனர். டெல்லியில் பிரதமரை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது தரப்பினர் சந்தித்தபோது, எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதிலிருந்தே பிரச்னைகள் பூதாகரமாக வெடிக்கத் தொடங்கியுள்ளன. எடப்பாடி பழனிசாமியிடமிருக்கும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மீது ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருப்பவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு கண் இருக்கிறது. இதேநிலை நீடித்தால், இணைந்த அணிகளிடம் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுப்பதில்கூட ஒற்றுமையில்லாத சூழ்நிலை இருக்கிறது" என்றார்.

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய தரப்பினருக்கிடையே நடந்துவரும் முட்டல் மோதல்களைத் தினகரன் தரப்பினர் வேடிக்கைபார்த்துவருகின்றனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக தினகரன் அறிவித்துள்ள நிலையில், அவரை எல்லா வகையிலும் சமாளிக்கும் வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தீவிரமாக ஆலோசிக்காமல், உள்ளடி வேலைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். டெல்லியை மையப்படுத்தியே அ.தி.மு.க-வின் அனைத்து அசைவுகளும் நடக்கின்றன. அதனால், டெல்லியின் அன்பை, ஆதரவைப் பெற எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கடுமையாக முயற்சி செய்து வருகின்றனர். இருதரப்பினரின் மோதலைத் தொடர்ந்து, டெல்லி பார்வையில் அனல் வீசத் தொடங்கியுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.


டிரெண்டிங் @ விகடன்