Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜயகாந்த் பாணியில் விஷால்! - பா.ஜ.க எதிர்ப்பின் பின்னணி #VikatanExclusive

விஷால்

Chennai: 

பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவுக்கு எதிராகக் கடுமையான கருத்துகளைக் கூறியதற்காக, வருமான வரித்துறை சோதனைக்கு ஆளாகியிருக்கிறார் நடிகர் விஷால். ‘விஜயகாந்தைப் போல அரசியலுக்கு முன்னோட்டம் பார்ப்பதற்காகவே, பா.ஜ.க நிர்வாகிகளுக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தினார் விஷால்' என்று திரையுலக வட்டாரத்தில் கூறுகின்றனர். 

நடிகர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான மெர்சல் திரைப்படத்தில், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி.யால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த வசனங்கள் இடம் பெற்றிருந்தன. ‘சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்' எனத் தமிழக பா.ஜ.க பிரமுகர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதைக் கண்டித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தனர். இதனால், தேசிய அளவில் மெர்சல் படம் ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ.க தேசியத் தலைவர் ஹெச்.ராஜா, ' மெர்சல் திரைப்படக் காட்சிகளை இணையதளத்தில் பார்த்தேன்' எனப் பேசினார்.

அவரது இந்தக் கருத்தால் கொந்தளித்த நடிகர் விஷால், ' ஒரு தேசியக் கட்சியின் தேசியச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தைச் சட்டவிரோதமாகப் பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஒருவேளை பைரஸி எனப்படும் திருட்டுக் குற்றத்தைச் சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டனவா அரசுகள்? அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து போய், அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? உங்களைப் போன்ற ஓர் அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டுப் பிரதியைப் பார்ப்பது என்பது ஓர் உண்மையான குடிமகனாகவும் கடின உழைப்பாளியாகவும் எதைச் செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் இருக்கும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதைக் கடுமையாகப் பாதித்துள்ளது. தங்களது செயலுக்குப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதோடு பைரஸியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அறிக்கை ஒன்றில் கடுமையாகச் சாடியிருந்தார். 

ஹெச்.ராஜாஅதையடுத்து, நேற்று விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாகத் தகவல் வெளியானது. இதற்குப் பதிலளித்த விஷால், ‘வருமான வரித்துறை சோதனை வழக்கமான ஒரு நடைமுறையாகவே பார்க்கிறேன். இதில் உள்நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை' எனக் கூறியிருந்தார். ஆனாலும், விஷால் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை அரசியல் அரங்கில் விவாதப் பொருளானது. இதுகுறித்து நம்மிடம் பேசிய விஷால் ஆதரவாளர் ஒருவர், “2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுத்தார் விஜய். 234 தொகுதிகளிலும் 300 முதல் 500 விஜய் ரசிகர்கள் அ.தி.மு.க-வின் வெற்றிக்காகப் பாடுபட்டனர். அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் விஜய் படத்தையும் காட்டித்தான் ஓட்டு கேட்டனர். இதன்பிறகு, ‘அரசியலுக்குள் நுழைய வேண்டும்' என விஜய் எதிர்பார்த்தார். அதற்கான சூழல்கள் அவருக்கு அமையவில்லை. 'தலைவா' படத்துக்கு ஜெயலலிதா தலைமையிலான அரசு எதிர்ப்பு காட்டியது. டைம் டு லீட் எனத் தலைவா படத்தின் பிரமோஷன் காட்சிகளால் கொதித்தது அ.தி.மு.க அரசு. இதன் எதிரொலியாக, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார் விஜய். ஆனாலும், அரசியலில் நுழைவதற்கான சரியான நேரம் அவருக்கு அமையவில்லை" என விவரித்தவர், 

“ரஜினியின் 'பாபா' படத்துக்கு பா.ம.க-வினர் கடுமையான எதிர்ப்பு காட்டினர். 'பாபா' படத்தின் படப்பெட்டியை பா.ம.க-வினர் தூக்கிக்கொண்டு போனபோது, களத்தில் நேரடியாக இறங்கினார் விஜயகாந்த். ‘கோழைகளைப் போல படப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள். தைரியமிருந்தால் பகலில் படப்பெட்டியைத் தூக்கிக்கொண்டு போ' என ஆவேசப்பட்டார். அடுத்து வந்த நாள்களில், கள்ளக்குறிச்சியில் பா.ம.க-வுக்கு எதிராகக் கூட்டம் போட்டு, அரசியலுக்குள் நுழைந்தார் விஜயகாந்த். இதே பாணியிலான அரசியலைத்தான் விஷால் செய்கிறார். தற்போது ஹெச்.ராஜாவை எதிர்ப்பதன் மூலம் நேரடி அரசியலுக்கு முன்னோட்டம் பார்க்கிறார். மெர்சல் படத்தில் வெளிப்படுகிற வசனத்தின் மூலமாக மத்திய அரசுக்கு எதிர்ப்பு காட்டுவதைவிட, நேரடியாகக் களத்தில் இறங்கும்போது, விஜயகாந்த்போல உள்ளே நுழைந்துவிடலாம் எனக் கணக்குப் போடுகிறார். அரசியலுக்குள் வரும் எண்ணம் இருப்பதால்தான், மத்தியில் ஆளும் ஒரு கட்சியின் தேசிய நிர்வாகியைக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார் விஷால். சரத்குமாரைத் தோற்கடித்து நடிகர் சங்கத்தைக் கைப்பற்றியதும் தயாரிப்பாளர் சங்கத்தைக் கைப்பற்றியதும் அரசியலுக்கான ஒரு முன்னோட்டம்தான். எதுவாக இருந்தாலும் களத்தில் நேரடியாக எதிர்கொள்ளும் மனநிலையில் விஷால் இருக்கிறார் என்பதையே இது காட்டுகிறது” என்றார் விரிவாக.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close