’வலுக்கட்டாயமாகப் பாலியல் தொழில் செய்யவைக்கிறார்கள்!’ - திருநங்கைகள் கொந்தளிப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே, சம்பாதித்துக்கொடுத்த பணத்தைத் திருப்பிக்கேட்டு, திருநங்கைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கந்துவட்டி
 

கந்துவட்டிக் கொடுமையால் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, தமிழகத்தில் கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவருகின்றன. இந்நிலையில், தாங்கள் சம்பாதித்துக் கொடுத்த பணத்தைத் திருப்பிக்கேட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று திருநங்கைகள் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து, மாயா என்ற திருநங்கை, "ராஜம்மாள் மற்றும் அவர் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தோம். என்னைப் போன்ற பல திருநங்கைகள் சம்பாதிக்கும் பணத்தை, அவரிடம்தான் வழங்க வேண்டும். தினசரி 2,000 ரூபாய் கொடுக்கச்சொல்லி கொடுமைப்படுத்துவார்கள். வலுக்கட்டாயமாக பாலியல் தொழில் செய்யவைப்பார்கள். அதேபோல, பிச்சை எடுத்து வசூல்செய்யும் தொகையையும் அவர்களிடம் வழங்க வேண்டும். ஆனால், எனக்கு வேறு வேலை செய்து வாழ ஆசை. அதனால், அவர்களிடமிருந்து விலக விரும்பினேன். எனவே, இதுநாள்வரை நாங்கள் சம்பாதித்தக் கொடுத்த 25 லட்ச ரூபாயைத் திருப்பிக்கொடுக்குமாறு கேட்டேன். ஆனால், அவர்கள் பணத்தை வழங்கவில்லை. மேலும், என்னை ஆள் வைத்து மிரட்டுகின்றனர். ஒருமுறை கத்தியால் என்னைக் குத்திவிட்டனர்.

கந்துவட்டி


இதுகுறித்து, துடியலூர் போலீஸாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றுகிறார்கள். மேலும், போலீஸாரும் எங்களைப் பாலியல்ரீதியாகத் தொந்தரவுசெய்கின்றனர். இது தொடர்பாக, நேற்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்தோம். இதையடுத்து, மாவட்டக் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்குமாறு கூறினார்கள். இப்படி எங்களைத் தொடர்ந்து அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறார்கள். எனவே, எங்களது பணத்தைத் திருப்பிக்கொடுத்து, ராஜம்மாள் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இதை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு படுத்துப் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, "உங்களோட அலட்சியத்தாலதான், திருநெல்வேலில ஒரு குடும்பமே செத்துப்போயிருக்கு, பேசாமப்போங்க" என்றனர். பின்னர், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், அவர்கள் கலைந்து சென்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!