கட் அவுட் கலாசாரத்துக்குத் தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம்!

உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்களுடன் பேனர், கட் அவுட் வைக்கத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த திரிலோக்‌ஷன குமாரி என்பவர் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்கள் மற்றும் கட் அவுட்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது வீட்டுக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் மற்றும் கட் அவுட்களை அகற்ற மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் தொடுக்கப்பட்ட இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், மனுதாரரின் வீட்டின் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் மற்றும் கட் அவுட்களை அகற்ற உத்தரவிட்டார். மேலும், பேனர்கள் மற்றும் கட் அவுட்களில் உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்கள் இல்லாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். கட்டடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் தேவையில்லாமல் கட் அவுட்கள் வைப்பதைத் தடுக்க வேண்டும் என்றும், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல், 1959-ம் ஆண்டு தமிழ்நாடு திறந்தவெளி விளம்பரப்படுத்துதல் சட்டத்தை அவ்வப்போது புதுப்பிக்கவும் அரசுக்கு நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!