'கவலைப்பட வேண்டாம்... அடுத்து விடுதலைதான்!' - பேரறிவாளன் நம்பிக்கை | Perarivalan returns to Vellore central jail after 2 month parole ends

வெளியிடப்பட்ட நேரம்: 16:03 (24/10/2017)

கடைசி தொடர்பு:17:04 (04/02/2019)

'கவலைப்பட வேண்டாம்... அடுத்து விடுதலைதான்!' - பேரறிவாளன் நம்பிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற பேரறிவாளன் 26 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு பரோலில் வெளியே விட தமிழக அரசு உத்தரவிட்டது. 


பரோலில் வெளியே வந்த பேரறிவாளன், ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தங்கி உடல்நலம் சரியில்லாத அவர் தந்தை ஞானசேகரனை (குயில்தாசன்) கவனித்து வந்தார். ஆனால், அவருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால், தந்தையைக் கவனித்துக்கொள்ள மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க வேண்டும் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மனு அளித்தார். அதுமட்டுமின்றி மற்ற அரசியல் தலைவர்களும் பரோலை நீட்டிக்க குரல் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து மேலும் ஒரு மாத காலத்துக்கு பரோலை நீட்டித்து உத்தரவிட்டது தமிழக அரசு. அதன் காலம் அக்டோபர் 24-ம் தேதியான இன்றோடு முடிந்தது. அதன்படி மாலை 2 மணிக்கு வேலூர் மத்திய சிறையிலிருந்து பேரறிவாளனை அழைத்துச் செல்ல எஸ்கார்ட் வாகனம் ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் வீட்டுக்கு வந்தது. மதியம் 3 மணிக்கு பலத்த பாதுகாப்போடு பேரறிவாளனை சிறைக்கு அழைத்துச் சென்றது போலீஸ். 

கண்ணீர் வடித்த அற்புதம்மாள்: 

பேரறிவாளனுக்குச் சிறுநீரக நோய் உள்ளதால் பரோலில் வந்த இரண்டு மாதமும் பேரறிவாளனை பக்கத்திலேயே இருந்து கவனித்துக் கொண்டார் அற்புதம்மாள். இந்த இரண்டு மாதகாலம் அண்ணன், ஆசைப்பட்டதையெல்லாம் சமைத்துக் கொடுத்தனர் பேரறிவாளனின்  சகோதரிகள். ஓரளவுக்கு உடல் நலம் தேறியுள்ள நிலையில் மீண்டும் அந்த இருட்டறை சிறைவாச வாழ்க்கைக்குச் செல்வதை நினைத்து கண்ணீர் வடித்தார் அற்புதம்மாள்.

 

 

மோசமான நிலையில் பேரறிவாளன் தந்தை ஞானசேகரன்:

பேரறிவாளன் தந்தை ஞானசேகரன் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் பேரறிவாளன் சிறைக்குச் செல்வது மேலும் அவரைப் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

 

 

அடுத்து விடுதலைதான்:

பரோல் முடிந்து பேரறிவாளன் வீட்டில் இருந்து வெளியே வந்ததும், ஜோலார்பேட்டை மக்கள் அவரைக் காண சூழ்ந்துகொண்டனர். அப்போது ஊர் மக்களைப் பார்த்து பேரறிவாளன் சிரித்த முகத்துடன் ' யாரும் கவலைப்பட வேண்டாம் அடுத்தது விடுதலைதான்’ என்று கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க