மருது பாண்டியர்கள் குரு பூஜையில் சலசலப்பு..!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருதுபாண்டியர்களின் 216 வது நினைவு தின குரு பூஜை அரசுவிழாவாக நடைபெற்றது.

இன்று நடைபெற்ற குரு பூஜை விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் பங்கேற்றார்கள். காலையில் இருந்தே பொதுமக்களும் இஸ்லாமிய அமைப்புகளும் அஞ்சலி செலுத்தினார்கள். காலையில் முதல் மரியாதையாக மருதுபாண்டியர்கள் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தேசிய கொடி ஏற்றுவது வழக்கம். அதற்கடுத்ததாக மருதுபாண்டியர்களின் பரம்பரை வாரிசுகள் அஞ்சலி செலுத்துவார்கள். ஆனால் அரசு மரியாதைக்கு முன்பாகவே முதல் ஆளாக தினகரன் அணியைச் சேர்ந்த சிவகங்கை மாவட்ட செயலாளர் உமாதேவன் மரியாதை செலுத்திவிட்டார். அதன் பிறகுதான் மற்ற அமைச்சர்கள் மரியாதை செலுத்தினார்கள். அதன் பிறகு வந்த வாரிசுகள் அஞ்சலி செலுத்த முன்னேறும்போது போலீஸ் மறுக்கவே சலசலப்பும் வாக்குவாதமும் முற்றியது. அரசு மரியாதை செலுத்திய பிறகுதான், நீங்கள் மரியாதை செலுத்த முடியும் என்று போலீஸ் சொன்னதும் உஷ்ணமானார்கள் வாரிசுகள். நீங்கள் எப்படி உமாதேவனை முதலில் மரியாதை செலுத்த அனுமதித்தீர்கள் எனக் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அரசு சார்பாக மருதுபாண்டியர்களுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்கள். அப்போது பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, "தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பெயரை சொல்லாமல் சுகாதாரத்துறை அமைச்சர் என்றதும் குறுக்கிட்ட அமைச்சர் மணிகண்டன், என் பெயரை எப்போதுமே விட்டுறீங்க அண்ணே என்றார். அடுத்ததாக மருதுபாண்டியர்களின் வரலாற்றை ஓவியங்களாக வரைந்து பொதுமக்களுக்கு காட்சிபடுத்தபடுமா என்கிற கேள்வி அவரிடம் வைக்கப்பட்டது. "முதல்வரிடம் கோரிக்கையை தெரிவிப்போம்" என்றவர் கந்துவட்டி குறித்து கேள்விக்கு பதில் அளிக்கவில்லை. அதன் பிறகு தி.மு.க கட்சியினர் மற்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ போன்றவர்கள் மரியாதை செலுத்தினர்.

இஸ்லாமிய அமைப்பினர் பேசும்போது சாதி, மதம் பார்க்காமல் சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள் மருது சகோதரர்கள். அதேநேரத்தில் குளம், கண்மாய்களைச் சாதி, மதம் பார்த்து அவர்கள் அமைக்கவில்லை. இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் ஆலயங்கள்,  மருத்துவமனைகள் அமைக்க நிலங்களைத் தானமாக வழங்கியவர்கள் மருதுசகோதரர்கள் என்றனர் நெகிழ்ச்சியோடு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!