காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்: ராதாகிருஷ்ணன் கோரிக்கை

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆகியோர் ஆய்வு செய்தனர். மருத்துவமனையில் டெங்குவிற்கு சிகிச்சைப் பெற்று வருபவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார் ராதாகிருஷ்ணன். அப்போது, ‘எவ்வளவு பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மீடியாக்களுக்குத் தெளிவாகச் சொல்லுங்கள். நீங்கள் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் சமூக ஆர்வலர்கள் என்று நிறையபேர் அவரவர்களுக்கு ஏற்றாற் போல ஒரு கணக்கைக் கொடுத்து மக்களை பீதியடையச் செய்கிறார்கள்’ என்றார். மருத்துவமனையைச் சுற்றிப்பார்க்கும்போது மூடப்படாமல் இருந்த தொட்டிகளைப் பார்த்து, ‘மருத்துவமனையில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் மாவட்ட ஆட்சியர் நமக்கே அபராதம் போட்டுவிடுவார்’ எனச் சிரித்துக் கொண்டே எச்சரித்தார்.

டெங்கு, ராதாகிருஷ்ணன்

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் சிக்கன் குனியா, டைபாயிடு, மூளைக்காய்ச்சல் போன்ற நோய்கள் கட்டுக்குள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, இலங்கை, மலேசியா போன்ற பகுதிகளில் டெங்கு கடந்த ஆண்டைவிட அதிகமாக இருக்கின்றது.  நூறு பேருக்குக் காய்ச்சல் இருந்தால், பத்து சதவிகிதத்தினருக்கு டெங்கு போன்ற காய்ச்சல் உள்ளது. அந்த விழுக்காட்டிலும் இரண்டு மூன்று சதவிகிதம் பேருக்குதான் டெங்கு அறிகுறிகள் இருக்கின்றன. அதையும் மருத்துவர்கள் மூலமாக கண்காணித்தால் தடுக்க முடியும். காய்ச்சல் அறிகுறி ஏற்பட்ட உடனே தாமதிக்காமல் மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறவேண்டும். 19-40 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலை உள்ள நாடுகளில் டெங்குக் காய்ச்சல் அதிகமாக இருக்கிறது.

டெங்கு, ராதாகிருஷ்ணன்

தண்ணீர் தேக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது. செங்கல்பட்டு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். எல்லாவற்றிற்கும் சிங்கப்பூரை உதாரணம் காட்டுகிறோம். அங்கே சிறிய அளவில் குப்பையைப் போட்டால் கூட ஃபைன் போடுகிறார்கள். நம்ம எவ்வளவுதான் விழிப்புஉணர்வு ஏற்படுத்தினாலும் இங்கே அப்படி நடந்து கொள்வதில்லை. மக்கள் தரப்பிலும் விழிப்புஉணர்வு வரவேண்டும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!