போலி பிரமாண பத்திரங்கள்! - எடப்பாடி பழனிசாமி அணிக்கு அடுத்த சிக்கல் | New problem arises for Edappadi palanisamy team due to False affidavits

வெளியிடப்பட்ட நேரம்: 19:43 (24/10/2017)

கடைசி தொடர்பு:20:07 (24/10/2017)

போலி பிரமாண பத்திரங்கள்! - எடப்பாடி பழனிசாமி அணிக்கு அடுத்த சிக்கல்

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் சசிகலா தரப்பு கொடுத்த போலி அஃபிடவிட் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நேரிடையாகவே அ.தி.மு.க-வின் அதிகார மையத்துக்குச் சசிகலா வந்தார். அடுத்து, அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா, தற்காலிகப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் போயஸ்கார்டனுக்குச் சென்று சசிகலாவிடம் சிரித்த முகத்துடன் கொடுத்தனர். ஜெயலலிதாவின் புகைப்படத்தில் தீர்மான நகலை வைத்து மலர்களைத் தூவி வணங்கிய சசிகலா, ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்து தொண்டர்களைச் சந்தித்தார். அப்போது, ஜெயலலிதாவைப் போலவே சசிகலாவின் நடவடிக்கைகள் மாறியிருந்தன. 

எடப்பாடி


 அப்போது, ஓ.பன்னீர்செல்வம் முதல்வர். கட்சிப் பணிகளில் தீவிரமாக இருந்த சசிகலாவை, முதல்வராக்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் முன்மொழிந்தனர். உடனடியாக ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் சசிகலா, சட்டசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சமயத்தில் ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக வாய்திறந்தார். அதன்பிறகு சசிகலாவின் தலைமையைப் பிடிக்காத கட்சியினர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்தனர். எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் வருகையால் ஓ.பன்னீர்செல்வம் உற்சாகமடைந்தார். 
 சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றதால் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். அதன்பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் துணைப் பொதுச் செயலாளரான தினகரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியில் மதுசூதனன் களமிறங்கினார். இது, அ.தி.மு.க இரட்டை இலைச் சின்னம் ஆகியவற்றுக்குச் சிக்கலை ஏற்படுத்தியது. தொடர்ந்து கட்சி, சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கியது. 
 இதனால், தொப்பி சின்னத்தில் தினகரனும் மின்கம்பம் சின்னத்தில் மதுசூதனனும் போட்டியிட்டனர். ஆனால், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த புகாரில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது, டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இதற்கிடையில் இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் அக்டோபர் 31-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் முடிவை அறிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த விசாரணைக்குப் பிறகு அடுத்த விசாரணை அக்டோபர் 30-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

 ஏற்கெனவே, இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க சசிகலா தரப்பும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில் இரட்டை இலைச் சின்னத்தை புரோக்கர் சுகேஷ்சந்தர் மூலம் மீட்டெடுக்க முயன்றதாக தினகரன் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த தினகரனுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் செயல்பட்டனர். இதனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் முதல்வர் மற்றும் அமைச்சர்களை தினகரன் விமர்சித்துவருகிறார். 

இரட்டை இலைச் சின்னம் விசாரணை தேர்தல் ஆணையத்தில் நேற்று நடந்த விசாரணையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய தரப்பினர், சசிகலா தரப்பினருக்கு இடையே கடுமையாக வாதம் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. அப்போது, சசிகலா தரப்பில் கொடுக்கப்பட்ட புகார் மனு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 
 இதுகுறித்து சசிகலா தரப்பில் டெல்லிக்குச் சென்றவர்களிடம் பேசினோம். "எடப்பாடி பழனிசாமி தரப்பு மாறி மாறி அஃபிடவிட்களைத் தாக்கல் செய்துள்ளன. முதலில் சசிகலா, தினகரனுக்கு ஆதரவாகவும், தற்போது அவர்களுக்கு எதிராகவும் அஃபிடவிட்களைச் சமர்பித்துள்ளது. மேலும், ஜெயலலிதா மறைந்தவுடன் டிசம்பர் மாதத்தில் நடந்த பொதுக்குழுவில் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்தப்பிறகு நடந்த பொதுக்குழுவில் சசிகலாவின் பொதுச் செயலாளரின் பதவி ரத்து செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 
 கட்சி, இரட்டை இலைச் சின்னம் ஆகியவற்றை முடக்க காரணமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு இணைந்தது ஜெயலலிதாவுக்கு அவர்கள் செய்யும் துரோகம். தேர்தல் ஆணையத்திடம் எங்கள் தரப்பு வாதத்தை வைத்துள்ளதோடு அதற்கான ஆவணங்களையும் சமர்பித்துள்ளோம். ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் நடத்திய பொதுக்குழு செல்லாது என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். மேலும், கட்சி விதிப்படி ஒருங்கிணைப்பாளர் பதவி கிடையாது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம். அ.தி.மு.க-வில் பொதுச் செயலாளரைத் தொண்டர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதனால்தான் சசிகலா பொதுக்குழுவில் தற்காலிகப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அக்டோபர் 31-ம் தேதிக்குள் இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் உள்ளது. இதுவரை மூன்று கட்ட விசாரணை முடிந்துள்ளது. அடுத்த விசாரணை வரும் 30-ம் தேதி நடைபெறவுள்ளது. எங்களுக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும், எதிரணியினர் தாக்கல் செய்த அஃபிடவிட்களில் 300-க்கும் மேற்பட்டவை போலி என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாகத் தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் என்ற அடிப்படையில் சசிகலா, புகார் கொடுத்துள்ளார் என்றனர். 

 எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேசியவர்கள், "நாங்கள் தாக்கல் செய்த அஃபிடவிட்கள் போலி என்று சொல்வது முற்றிலும் தவறானது. ஏனெனில் அனைத்து அஃபிடவிட்களும் முழு விவரங்களுடன் உள்ளன. குறிப்பாக அஃபிடவிட்களைத் தாக்கல் செய்தவர்களின் அடையாள அட்டையிலிருந்து ஆதார் கார்டு நம்பர் வரை குறிப்பிட்டுள்ளோம். அடுத்த விசாரணையில் போலி அஃபிடவிட் பிரச்னை எழும்பட்சத்தில் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். அக்டோபர் 31-ம் தேதிக்குள் இரட்டை இலை எங்கள் கையில் கிடைத்துவிடும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளர் இரட்டை இலைச் சின்னத்தில்தான் போட்டியிடுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்றனர். 

 தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், "இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட அஃபிடவிட்களை ஆராய்ந்து, கட்சியில் எந்த அணிக்குப் பெரும்பான்மை உள்ளதோ அவர்களுக்குத்தான் சின்னம் ஒதுக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகள்தான் கடந்தகாலங்களில் நடந்துள்ளன" என்றனர்

 


டிரெண்டிங் @ விகடன்