’ஒரு குடும்பமே தீக்குளித்ததுக்கு மாநில அரசின் அலட்சியமே காரணம்’: கனிமொழி சாடல்

கந்து வட்டிக்காரர்களின் அச்சுறுத்தலால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தின் முன் ஒரு குடும்பமே தீக்குளித்ததுக்கு மாநில அரசின் அலட்சியமே காரணம் என்று தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். 


கந்துவட்டி கொடுமையால் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண் குழந்தைகள் உள்பட 4 பேர் தீக்குளித்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியரும் காவல்துறையினரும் உறுதி அளித்துள்ளனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளம் மூலம் கருத்துத் தெரிவித்துள்ள தி.மு.க மாநிலங்களவை எம்.பி கனிமொழி, ‘திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்துவும் அவர் மனைவி சுப்புலட்சுமியும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மண்ணெண்ணெய் ஊற்றி அவர்களின் 2 பெண்குழந்தைகளோடு குடும்பத்துடன் தீக்குளித்துள்ளனர். இதில் சுப்புலட்சுமியும் 2 பெண்குழந்தைகளும் உயிர் நீத்த சம்பவம் மிகுந்த வருத்தம் தருகிறது.

கந்து வட்டிக்காரர்களால் அச்சுறுத்தப்பட்ட அவர்கள் காவல் நிலையத்திலும் ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகள் மீது தீ வைக்கத் துணிந்தால் அவர்கள் அனுபவித்த கொடுமைகள் எவ்வளவு மோசமாக இருந்திருக்கும். கந்து வட்டியைத் தடை செய்யும் சட்டம் ஆதரவாக இருந்தாலும் அதைச் செயல்படுத்த வேண்டிய காவல்துறை, குற்றவாளிகளுக்கே ஆதரவாக உள்ளது. ஆளும் அரசாங்கம் மக்கள் நன்மை பற்றிச் சிறிதாவது எண்ணிப் பார்க்க வேண்டும். இன்னும் பல உயிர்கள் பிரியும் முன்பு கந்துவட்டிக் கொடுமைகள் தமிழ்நாட்டில் நிச்சயம் தடுக்கப்பட வேண்டும். ஒரு குடும்பமே தீக்குளித்ததுக்கு மாநில அரசின் அலட்சியமே காரணம்’ என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!