உலமாக்களுக்கு அடையாள அட்டை - கலெக்டர் அறிவிப்பு! | Identity card will be issued to ulamakkal, says Karur collector

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (24/10/2017)

கடைசி தொடர்பு:11:54 (27/11/2018)

உலமாக்களுக்கு அடையாள அட்டை - கலெக்டர் அறிவிப்பு!

 

பள்ளிவாசல் தர்க்காக்கள், மதரஸாக்களில் பணிபுரிவோர் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற உலமா அடையாள அட்டை வழங்கப்பட  இருப்பதாக கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:
 "தமிழ்நாடு அரசின் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் உலமாக்கள்(ம) இதரப் பணியாளர்கள் நல வாரியம் என்ற அமைப்பு இயங்கி வருகிறது. இதன்மூலம், பள்ளிவாசல், தர்கா, மதரஸாக்களில் பணிபுரியும் 18 வயது முதல் 60 வயது வரை உள்ளோருக்கு இவ்வாரியத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்யப்பட்டு உலமா அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. உறுப்பினர்கள் அடையாள அட்டை பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாரியத்தின் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, திருமணம், மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை, விபத்து நிவாரணம், மூக்குக் கண்ணாடி ஈடு செய்ய உதவித்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதியம் ஆகிய நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். உறுப்பினர்களில் பதிவை 3 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் புதுப்பித்தல் செய்தல் வேண்டும். உறுப்பினரின் பதிவைப் புதுபித்தலுக்கு 23.10.2017 அன்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரின் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பிற்பகல் 4 மணிக்குச் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. அச்சமயம் இவ்வாரியத்தில் உறுப்பினர்கள் பதிவை உரிய காலத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.