அரசுப் பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படுவது எப்போது?... அமைச்சர் செங்கோட்டையன் பதில்

ஜனவரி மாதத்துக்குப் பிறகு அரசுப் பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடந்தது. விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், `மாணவர்களுக்குச் சிறந்த கல்வியை அளிப்பதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. போட்டித் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். நவம்பர் மாத இறுதிக்குள் ஆசியர்களுக்கு வீடியோ கான்பரன்ஸிங் மூலம் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம். மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் 3,000 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 15 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்மூலம் மத்திய அரசு கொண்டுவரும் எந்தப் பொதுத்தேர்வுக்கும் மாணவர்களைத் தயார்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

புதிய பாடத்திட்ட மாற்றம் குறித்த அறிவிப்புகள் நவம்பர் 15-ம் தேதி முதல் வெளியிடப்பட உள்ளது. அந்த மாற்றத்தில் தமிழ் கலாசாரத்தைப் போற்றும் வகையில் புதிய பாடத்திட்டம் அமையும். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு வரும் டிசம்பருக்குள் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். அதில், மாணவர்களின் முகவரி, படிக்கும் வகுப்பு உள்ளிட்ட முழுவிவரங்களும் இடம்பெறும். ஜனவரிக்குப் பின்னர் பள்ளிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!