2017-18 ஆண்டு சம்பா நெற்பயிருக்கான பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அறிவிப்பு! | government announcement 2017-18 year agriculture insurance scheme!.

வெளியிடப்பட்ட நேரம்: 05:50 (25/10/2017)

கடைசி தொடர்பு:12:30 (22/06/2018)

2017-18 ஆண்டு சம்பா நெற்பயிருக்கான பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் அறிவிப்பு!

2017-18 ம் ஆண்டுக்கான சம்பா நெற்பயிருக்கான பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவுசெய்ய வரும் நவம்பர் 30-ம் தேதிதான் கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

இதுதொடர்பான அரசின் அறிக்கையில், "பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாக்கவும், பண்னை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும், 2017-18 ம் ஆண்டில் தமிழ்நாட்டில் சம்பா பருவத்தில் செய்யப்படும் நெற்பயிரை பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த நடப்பாண்டில் கரூர் மாவட்டத்தில் 107 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன்பெறா விவசாயிகள், கரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின்(AICIL) அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் (Common Service Centres(CSC) ) மூலமாகவோ வங்கிகள்/தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவுசெய்து கொள்ளலாம்.

இவ்வாறாக சம்பா பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவுசெய்ய கடைசி நாள் வரும் நவம்பர் 30-ம் தேதி. எனவே, விவசாயிகள் இறுதிநேர நெரிசலைத் தவிர்க்கவும்,விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி தங்களது நெற்பயிரை முன்கூட்டியே பதிவுசெய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிர்க்காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 1.5 சதவிகிதம் அதாவது ஏக்கருக்கு ரூ 26850 யில் ரூ 402.75 காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தினால் போதுமானது. விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank Pass Book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Cad) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள்/தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக்கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.