வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (25/10/2017)

கடைசி தொடர்பு:11:20 (25/10/2017)

குஜராத் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

தேர்தல் ஆணையம்

குஜராத் சட்டமன்ற பொதுத் தேர்தல் தேதியை, தேர்தல் ஆணையம்  இன்று அறிவிக்கிறது. வேட்புமனு தாக்கல், தேர்தல் தேதி, வாக்கு எண்ணிக்கை ஆகிய தேதிகளையும் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். தேர்தல் தேதி அறிவித்தவுடன், தேர்தல் நடைமுறைகள் குஜராத்தில் அமலுக்கு வரும். 

குஜராத், இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான 5 ஆண்டு பதவிக் காலம், வரும் ஜனவரி மாதத்துடன் முடிகிறது. கடந்த இரு வாரத்துக்கு முன்னர், இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை, தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி அறிவித்தார். மேலும் அவர் கூறுகையில், 'குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல், டிசம்பர் 18-ம் தேதிக்கு முன் நடத்தி முடிக்கப்படும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், டிசம்பர் 31-ம் தேதிக்குள் நடத்தப்படும்'' என்று அறிவித்தார்.  குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பில் அரசியல் பின்னணி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அதற்குப் பதில் அளித்த தலைமைத் தேர்தல் ஆணையர், ''ஏற்கெனவே, குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி, வேறொரு நாளில் அறிவிக்கப்பட்ட முன்னுதாரணம் உண்டு'' என்று தெரிவித்தார்.

குஜராத் மாநில ஆட்சி, கடந்த 19 ஆண்டுகளாக பா.ஜ.க கையில் இருக்கிறது. 1998-ம் ஆண்டிலிருந்து இதுவரை பா.ஜ.க ஆட்சிதான் நடந்துவருகிறது. இந்த மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திர மோடி, அமித் ஷா, எல்.கே.அத்வானி உள்ளிட்டோர்,  பா.ஜ.க-வின் முக்கிய தலைவர்களாக இருக்கிறார்கள். மத்தியிலும் பா.ஜ.க ஆட்சி. எனவே, குஜராத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் பா.ஜ.க மிகக் கவனமுடன் இருக்கிறது. அதற்காகவே, கடந்த 15 நாள்களில் இரண்டு தடவை குஜராத் சென்று, இரண்டு மிகப்பெரிய திட்டங்களைத் தொடக்கிவைத்தார்  பிரதமர் மோடி. இந்த நிலையில், தேர்தல் தேதியை அறிவியுங்கள் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்துவருகின்றன. இதற்கிடையில், 'இன்று பிற்பகல் 1 மணிக்கு, குஜராத் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க