வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (25/10/2017)

கடைசி தொடர்பு:12:05 (25/10/2017)

’வேலைவாய்ப்பற்றவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!’- கலெக்டர் அறிவிப்பு


                 

’கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள், உதவித்தொகைத் திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்’ என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

இதுசம்பந்தமாக அவர் அனுப்பியிருக்கும் அறிக்கையில்,  ’வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் (பொது) கீழ் பயன்பெற, பள்ளி இறுதி வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்புத் தகுதியை, கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து, 01.07.2017 முதல் 30.09.2017 வரையான காலாண்டில், 5 ஆண்டுகள் நிறைவுசெய்யும் அனைவரும் தகுதியுடையவர்கள் ஆவர். அதேபோல,வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் பயன்பெற, 01.07.2017 முதல் 30.09.2017 வரையான காலாண்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு நிறைவுசெய்யும் எஸ்.எஸ்.எல்.சி/எஸ்.எஸ்.எல்.சி-க்கும் கீழ் தகுதி /ப்ளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு தகுதிபெற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தகுதியுடையவர்கள்.

 வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் (பொது) கீழ் பயன்பெறுவோர்களின் ஒட்டுமொத்த குடும்ப வருமானம், ஆண்டுக்கு ரூ 50,000-க்கு (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) மிகாமல் இருத்தல் வேண்டும். வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் பயன்பெறுவோர்களது குடும்ப வருமானத்திற்கு உச்சவரம்பு கிடையாது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உச்ச வயது வரம்பு, தாழ்த்தப்பட்ட/பழங்குடியினருக்கு 45 வயதும், இதர வகுப்பினருக்கு 40 வயதும் ஆகும். உதவித்தொகை பெற விரும்புவோர், தினசரி பயிலும் மாணவராக இருத்தல் கூடாது. விண்ணப்பதாரர் அரசுத்துறை/தனியார் துறையில் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியிலோ அல்லது சுயவேலைவாய்ப்பில் ஈடுபடுபவராகவோ இருத்தல் கூடாது. இவர்களுக்கு விண்ணப்பப்படிவங்கள் 25.10.2017 முதல் இலவசமாக வழங்கப்பட உள்ளது. 

மேலும், ஏற்கெனவே இத்திட்டத்தின்மூலம் பயன்பெற்றுவரும் பயனாளிகள் அனைவரும், தங்களது வங்கிக் கணக்கு எண் புத்தகத்தை அக்டோபர் 2017 வரை உரிய குறிப்புகள் இடப்பட்டு, அசல் வேலைவாய்ப்பு அடையாள அட்டையும்,அனைத்துப் பயனாளிகளின் பதிவு எண்ணில் ஆதார் அடையாள அட்டை எண் இணைக்கும்பொருட்டு, ஆதார் எண்ணுடன் சுய உறுதிமொழி ஆவணம் சமர்பிக்கவும் இதன்மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அசல் குடும்ப அட்டை மற்றும் அசல் கல்விச்சான்றிதழ்கள் ஆகியவற்றுடன் அலுவலக வேலைநாளில், முற்பகல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்’ என்று தெரிவித்துள்ளார்.