இமயமலையில் பிரம்மா படுத்துறங்கும் ‘பிரம்மகமலம்’ பூ... தேனியில் பூத்த ஆச்சர்யம்! | The rare flower Brahma Kamalam blossomed at theni

வெளியிடப்பட்ட நேரம்: 14:06 (25/10/2017)

கடைசி தொடர்பு:14:06 (25/10/2017)

இமயமலையில் பிரம்மா படுத்துறங்கும் ‘பிரம்மகமலம்’ பூ... தேனியில் பூத்த ஆச்சர்யம்!

தேனி மாவட்டம் கம்பம் சி.எம்.எஸ் நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் அய்யாதுரை. அவரது வீட்டில் அபூர்வ வகை மலரான பிரம்ம கமலம் பூ 2 நாள்கள் முன்பு பூத்தது. இதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யமாக பார்த்துச்சென்றனர். பிரம்மனின் நாபிக் கமலத்தில் இருந்து பூ தோன்றுவதுபோல தோற்றமளிப்பதால் இதற்கு பிரம்மகமலம் என பெயர்வந்ததாக கூறப்படுகிறது. மேலும், ஜப்பானியர்கள் இந்த மலரை தங்கள் அதிர்ஷ்டத்தின் வழியாகவும், பியூட்டி அண்டர்தி மூன் எனவும் அழைக்கிறார்கள்.  இமயமலைப் பகுதிகளில் மட்டுமே காணக்கிடைக்கும் இந்தப் பிரம்மகமலம் தற்போது தமிழகத்தில் காண முடிகிறது.

பிரம்மகமலம்

ஒரு செடியை வளர்க்க வேண்டும் என்றால், அதன் விதை அல்லது கிளையை நட்டுவைக்க வேண்டும். ஆனால், இந்த பிரம்மகமலம் செடியில் இருக்கும் ஒரு இலையை பிடுங்கி நிலத்தில் நட்டுவைத்தாலே அது செடியாக மாறும் அதிசய திறன் கொண்டது. இலைகளே வளரும் கணுக்களுக்களாக செயல்பட்டு நிலத்தில் வேர் விட்டு வளர்கிறது. இந்தச் செடிக்கு அதிக தண்ணீர் தேவை இல்லை. காரணம் இந்தச் செடி கள்ளி வகையைச் சேர்ந்தது. குறைந்தத் தண்ணீரில் கூட அழகாக வளரும்.

கொடியாக படரும் செடியில் பூக்கும் பூக்கள் பார்க்க நட்சத்திரம் போன்ற தோற்றம் கொண்டது. அளவில் பெரியதாக பளிச்சிடும் வெண்மை நிறத்தில் காட்சியளிக்கிறது. இதன் மணம் எட்டு ஊருக்கு வீசும் என்கிறார்கள். மேலும், அந்த மணம் ஒருவித மன அமைதியை கொடுக்குமாம். Benzyl Salicylate என்ற வேதிப்பொருள் தான் பூவின் மணத்துக்குக் காரணம். இரவு நேரங்களில் பூப்பதால் மகரந்தச் சேர்க்கைக்கான பூச்சிகளை ஈர்க்கவே அதன் மணம் உதவும். மேலும், இரவிலும் பளிச்சிடும் அதன் வெண்மை நிறம் பூச்சிகளை தன்பால் ஈர்க்க உதவுகிறது.

பிரம்மகமலம்

வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த அதிசய பிரம்மகமலம் பூவை தனது வீட்டில் வைத்திருக்கும் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் அய்யாதுரையிடம் பேசினோம். “பிரம்மாவுக்கு உகந்தப் பூவாக கருதப்படும் இந்த பிரம்மகமலம் பூ மிகவும் அரிதானது. வருடத்துக்கு ஒரு முறை இரவு 10 மணிக்கு பூக்கும். காலை 5 மணிக்கு முழுவதுமாக வாடி, பூ இருந்ததற்கான அடையாளங்களே இருக்காது. இந்த அதிசய பூவின் நடுவில் பார்த்தால் பிரம்மா படுத்திருப்பது போலவே இருக்கும். அதன் வாசம் மிக அருமையாக இருக்கும். சந்தனம் கலந்த பூவின் வாசம் அது. எனது நண்பர் மூலமாகத்தான் இந்தச் செடியை பற்றி தெரிந்துகொண்டேன். என் வீட்டில் இந்தச் செடியை நட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் பூக்க ஆரம்பித்தது. எப்போதெல்லாம் என் வீட்டில் பிரம்மகமலம் பூ பூக்கிறதோ அப்போதெல்லாம் சுப காரியங்கள் நடந்துவிடும் என்பது என் நம்பிக்கை. அது உண்மையாகக் கூட இருக்கலாம். எனவே, இந்த பிரம்மகமலம் செடியை தினமும் வழிபட்டு வருகிறேன்.” என்றார்.

பிரம்ம கமலம்

‘யாராவது எனக்கொரு இலை கொடுங்கள், எங்கள் வீட்டிலும் செடியாக்கி பூக்கள் பார்க்க ஆசை…’ என கேட்டால் கொடுப்பீர்களா என நாம் கேட்டதற்கு, சிரித்துக்கொண்டே ’பார்க்கலாம்..!’ என்றார் அய்யாதுரை. அதிசயக் குணங்களை கொண்டுள்ள இந்தப் பிரம்மகமலம் செடி பார்க்க கொடி போலவும், இலைகள் பெரியதாகவும், பூக்கள் பளிச் நிறத்தில் நட்சத்திர வடிவத்தில் இருக்கிறது. இதை எங்கு பார்த்தாலும், யாருக்கும் தெரியாமல் ‘லவட்டி’க்கொள்ளாமல், செடி வளர்ப்பவரிடம் கேட்டு ஓர் இலையை வாங்கி வந்து வீட்டில் வளருங்கள்.


டிரெண்டிங் @ விகடன்

அதிகம் படித்தவை