வெளியிடப்பட்ட நேரம்: 11:35 (25/10/2017)

கடைசி தொடர்பு:11:45 (25/10/2017)

கமல்ஹாசன் மீது வழக்குப்பதியலாம்! காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நிலவேம்புக் கஷாயம் விவகாரத்தில், மனுதாரர் புகாரில் முகாந்திரம் இருந்தால், நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதற்குக் காரணமான கொசுவை அழிக்கும் நடவடிக்கையில் தமிழக சுகாதாரத்துறை ஈடுபட்டுவருவதோடு, நாேய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நிலவேம்புக் கஷாயத்தை வழங்கிவருகிறது. இதனிடையே, நிலவேம்புக் கஷாயம் தொடர்பாக சர்ச்சை எழுந்தது. இதைத் தொடர்ந்து, நிலவேம்புக் கஷாயம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் கருத்து ஒன்றை வெளியிட்டார். அதில், "சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தினர் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபட வேண்டாம். ஆராய்ச்சியை அலாேபதியர்தான் செய்ய வேண்டுமென்றில்லை. பாரம்பர்யக் காவலர்களே செய்திருக்க வேண்டும். மருந்துக்கு பக்க விளைவுண்டு என்பதும் பாரம்பர்யம்தான்" என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, நிலவேம்புக் கஷாயம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் புகார் அளித்தார். ஆனால், இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனிடையே, கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் தேவராஜன். அதில், ''நிலவேம்புக் கஷாயம் குறித்து கமல்ஹாசன் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் மீது புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கமல்ஹாசன்மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு, உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால், நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப் பதியலாம் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டது.