என்.எல்.சி நிறுவனத்தை தனியாருக்கு விற்கக்கூடாது - எச்சரிக்கும் வைகோ | vaiko statement regarding NLC

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (25/10/2017)

கடைசி தொடர்பு:14:00 (25/10/2017)

என்.எல்.சி நிறுவனத்தை தனியாருக்கு விற்கக்கூடாது - எச்சரிக்கும் வைகோ

''என்.எல்.சி பொதுத்துறை நிறுவனத்தைச் சூறையாடி, தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கு மோடி அரசு துடித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிறுவனம், வரலாறு காணாத அளவுக்கு கடந்த 2016-2017-ம் நிதி ஆண்டில் 2342.9 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. அந்த என்.எல்.சி பங்குகளைத் தனியாருக்கு விற்கக்கூடாது'' என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ‘நவரத்னா’ தகுதியைப் பெற்று சிறப்பாக இயங்கிவரும் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனம், தமிழகத்துக்கும் தென்மாநிலங்களுக்கும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து, குறைந்த விலையில் வழங்கி, மிகப்பெரிய வளர்ச்சிபெற்று, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துவருகிறது. 1956-ம் ஆண்டு, என்.எல்.சி. நிறுவனம் நிறுவப்பட்டதிலிருந்து வரலாறு காணாத அளவுக்கு கடந்த 2016-2017 நிதி ஆண்டில் 2342.9 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. 

இத்தகைய சிறப்புடன் தன்னிகரற்று விளங்கும் பொதுத்துறையான என்.எல்.சி நிறுவனத்தின் பங்குகளை, 15 விழுக்காடு விற்பனை செய்வதற்கு நரேந்திர மோடி அரசு முடிவுசெய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. முதற்கட்டமாக 5 விழுக்காடு பங்குகளை இன்று (அக்டோபர் 25) முதல் விற்பனை செய்யவும், அதன்மூலம் 800 கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிடப்பட்டிருப்பதாக, மத்திய நிதி அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில், பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனைமூலம் 72 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும் என்றும், கடந்த ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனைமூலம் 30 ஆயிரம் கோடி திரட்டப்பட்டு ள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நேற்று பெருமையுடன் கூறி இருக்கிறார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பொதுத்துறை நிறுவனங்களைச் சூறையாடி, தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கு மோடி அரசு துடித்துக்கொண்டிருக்கிறது. ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டார்டப் இந்தியா’ என்று தொழில் தொடங்குவதற்கு, பன்னாட்டு நிறுவனங்களை கூவிக் கூவி அழைக்கும் மோடி அரசு, சாதனை படைத்துவருகின்ற என்.எல்.சி., பெல், என்.டி.பி.சி., என்.எச்.பி.சி போன்ற பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனைசெய்வது எதற்காக? லாபம் ஈட்டிவரும் பொதுத்துறைகளைத் தனியாருக்கு விற்பனைசெய்வதற்கு பா.ஜ.க. அரசு தொடர்ந்து ஆர்வம் காட்டுவது ஏன்?

என்.எல்.சி நிறுவனத்தின் 51 விழுக்காடு பங்குகளை வாஜ்பாய் அரசு 2002-ம் ஆண்டு விற்பனைசெய்ய முடிவு எடுத்தபோது, 2002 மார்ச் 19-ம் தேதி, நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து, என்.எல்.சி பங்குகள் விற்பனைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தேன். அப்போது நாடாளுமன்றத்தில், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் என்னுடைய கோரிக்கைக்கு ஆதரவாக என்.எல்.சி தனியார்மயமாக்கலை எதிர்த்தார்கள். பின்னர், பிரதமர் வாஜ்பாயை நேரில் சந்தித்து, என்.எல்.சி தனியார்மயமாக்கல் திட்டத்தைக் கைவிட வற்புறுத்தினேன். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த வாஜ்பாய், மத்திய அரசின் கொள்கை முடிவையே மாற்றி, என்.எல்.சி தனியார்மயமாகாது என்று அறிவிப்பு செய்தார்.

வாஜ்பாயையே மறந்துவிட்ட மோடி அரசு, வாஜ்பாய் அரசின் கொள்கையையா பின்பற்றப் போகிறது? என்.எல்.சி இந்தியா பங்குகள் விற்பனைசெய்யும் திட்டத்தை மோடி அரசு திரும்பப் பெறவேண்டும். இல்லையேல், ஒட்டுமொத்த தமிழகமே ஓரணியில் நின்று போராட்டக் களத்தில் இறங்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்'' என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க