ரூ.12-க்கு 8 ஆயிரம் அபராதம்! வங்கியை அதிரவைத்த நீதிமன்றம்! | Consumer Court slapped nanguneri canara bank with 8k fine

வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (25/10/2017)

கடைசி தொடர்பு:13:44 (25/10/2017)

ரூ.12-க்கு 8 ஆயிரம் அபராதம்! வங்கியை அதிரவைத்த நீதிமன்றம்!

வாடிக்கையாளரின் ஒப்புதல் இல்லாமலேயே, வங்கிக் கணக்கிலிருந்து 12 ரூபாய் எடுத்த வங்கிக்கு, 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது, நுகர்வோர் நீதிமன்றம்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர், அங்குள்ள கனரா வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளார். பிரதமர் காப்பீடு திட்டத்தின்மூலம், ஐயப்பன் வங்கிக் கணக்கில் இருந்து அவரது ஒப்புதல் இல்லாமலேயே, கனரா வங்கி ரூபாய் 12 எடுத்துள்ளது. இதுகுறித்து நாங்குநேரி கனரா வங்கிக் கிளை மேலாளர் மீது திருநெல்வேலி  நுகர்வோர் நீதிமன்றத்தில் ஜயப்பன் சார்பில், வழக்கறிஞர் பிரம்மா கடந்த 2016-ல் வழக்குத் தொடர்ந்தார். இதனிடையே, ஐயப்பனின் சேமிப்புக் கணக்கிலிருந்து எடுத்த 12 ரூபாயை வங்கி திரும்பக் கொடுத்துவிட்டது.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் நாராயணசாமி மற்றும் உறுப்பினர் சிவ மூர்த்தி ஆகியோர், மனுதாரர் ஐயப்பனின் சேமிப்புக் கணக்கிலிருந்து 12 ரூபாயை மனுதாரரின் அனுமதி பெறாமல், விண்ணப்பம் எதுவும் பெறாமல், காப்பீடு செய்தது சேவைக் குறைபாடு ஆகும் என்பதால், மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக  5,000 ரூபாய் மற்றும் வழக்குச் செலவு 3,000 ரூபாய் சேர்த்து, மொத்தம் 8,000 ரூபாயை ஒருமாத காலத்துக்குள் நாங்குநேரி கனரா வங்கிக் கிளை மேலாளர் வழங்க வேண்டும் என  உத்தரவு பிறப்பித்துள்ளனர்.