வெளியிடப்பட்ட நேரம்: 14:51 (25/10/2017)

கடைசி தொடர்பு:14:57 (25/10/2017)

நெல்லை தீக்குளிப்பு சம்பவம்: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

தமிழகத்தை அதிர்ச்சியில் உறையவைத்த நெல்லை தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக, தேசிய மனிதஉரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

nellai suicide
 

நெல்லை மாவட்டம், காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து, தன் குழந்தைகள் மற்றும் மனைவியுடன் நேற்று முன் தினம் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சிசெய்தார். நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த இந்த கோரச் சம்பவத்துக்கு, கந்துவட்டிக் கொடுமையே காரணம். நான்கு பேரும் பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி இரண்டு குழந்தைகளும் தாயும் நேற்று முன் தினமே உயிரிழந்துவிட்டனர். பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசக்கிமுத்துவும் சிகிச்சை பலனின்றி் இன்று மதியம் உயிரிழந்துவிட்டார். 

குடும்பத் தேவைக்காக கந்துவட்டிக்குக் கடன் வாங்கியதே இசக்கிமுத்து குடும்பத்தை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. இசக்கிமுத்து வாங்கிய 1.50 லட்சம் கடனுக்கு, இதுவரை இரண்டரை லட்சம் ரூபாய் வட்டியாக மட்டும் கட்டியுள்ளார். மொத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்குமாறு கந்துவட்டிக்குக் கொடுத்த பெண், இசக்கிமுத்துவை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக, அச்சன்புதூர் காவல்நிலையத்தில் இசக்கிமுத்து புகார்செய்தார். ஆனால், போலீஸார் கட்டப்பஞ்சாயத்து செய்ததுடன், பணத்தைக் கொடுக்குமாறு நெருக்கடிகொடுத்தனர். இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் 5 முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மனம் உடைந்த இசக்கிமுத்து, கலெக்டர் அலுவலகம் முன்பாக குடும்பத்துடன் தீக்குளித்தார்.

இந்நிலையில், 'இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க