'எதிர்ப்பு வலுவாக இருந்தால் தவறுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்!' - கந்துவட்டிக்கு எதிராகப் பொங்கிய வழக்கறிஞர்கள்

கந்துவட்டிக் கொடுமையைக் கண்டித்து அரியலூர் வழக்கறிஞர்கள் 2 நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

               
நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தும், புகார் அளித்து நடவடிக்கை எடுக்காத நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க எடுக்க வலியுறுத்தி அரியலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்றத்துக்கு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 2 நாள் நீதிமன்ற பணிகள் புறக்கணித்துள்ளனர். மேலும் கந்து வட்டிக் கொடுமையைத் தடுக்கும் வகையில் மாவட்டம்தோறும் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனா். இதில் ஏராளமான வழக்கறிஞா்கள் கலந்துகொண்டனா். 

     

வழக்கறிஞர் பாபு நம்மிடம் பேசினார்.‘‘கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தீக்குளித்து இறக்கிறார்கள் என்றால்  தமிழக அரசு வெக்கத்தில் தலைகுனியவேண்டாமா. இந்தப் பிரச்னைக்குக் காவல்துறையும் அதிகாரிகளின் மெத்தனப் போக்குமே காரணம். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அந்தக் குடும்பத்தினர் தீக்குளித்து இருக்கமாட்டார்கள். காவல்துறையும் அரசு நிர்வாகமும் செயலிழந்து கிடக்கிறது. இந்த நிகழ்வே ஓர் உதாரணம்.’’ 15 வருடங்களுக்கு முன்பு கந்து வட்டி தடைச்சட்டத்தை அறிமுகபடுத்தியது தி.மு.க அரசுதான். அதன் பிறகு, எத்தனை வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. யார் யார் சிறையில் இருக்கிறார்கள். ஒரு நிகழ்வு நடந்தால் மற்றொரு நிகழ்வை மறந்துவிடுவோம் இது தான் நம்முடைய வழக்கம்.

துக்ளக் சோ ஒரு வார்த்தையை அழகாகச் சொல்லியிருப்பார். தமிழர்கள்கிட்ட மறதி என்று ஒன்று இருக்கும் வரையிலும் யார் வேண்டுமானால் ஆண்டுகொண்டிருக்கலாம் அது போலதான் மறப்பது நமது தேசிய வியாதி. இனிமேல் இதுபோன்று இருக்கக் கூடாது. புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒரு தவறு நடக்கும்போது வழுவான எதிர்ப்புகளைப் பதிவு செய்தால்தான் அந்தத் தவறுகளுக்கு முற்றுபுள்ளி வைக்கமுடியும் .களத்தில் இறங்குங்கள் மக்களே என்று முடித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!