வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (25/10/2017)

கடைசி தொடர்பு:16:15 (25/10/2017)

வடகிழக்குப் பருவமழை: வாட்ஸ்அப் எண், புகார் எண்களை அறிவித்தது தமிழக அரசு!

வடகிழக்குப் பருவமழை தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் மற்றும் புகார் எண்ணைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழையொட்டி எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், பெருநகர சென்னை மாநகராட்சியில் 25.10.2017 முதல் அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து குறைந்தபட்சம் 75 பணியாளர்கள் பணியாற்றும் வகையில் 24 x 7 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வடகிழக்குப் பருவமழை தொடர்பான புகார்களைப் பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1913 மூலமும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044-2536 7823, 2538 4965, 2538 3694 25619206 மூலமும் வாட்ஸ்அப் எண்கள் 94454-77662 மற்றும் 94454-77205 மூலமும் தெரிவிக்கலாம்.

இக்கட்டுப்பாட்டு அறையில் பெருநகர சென்னை மாநகராட்சி மட்டுமல்லாது, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, சென்னை குடிநீர் வாரியம் தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகிய துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் இடம்பெறுவார்கள். பெறப்படும் தகவல்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தெரிவித்து உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் வசமுள்ள 1,096 வாக்கி டாக்கிகள் மூலம் தகவல் தொடர்பை பரிமாறிக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வசமுள்ள 16 சுரங்கப்பாதைகள், நெடுஞ்சாலைத்துறை வசமுள்ள 6 சுரங்கப்பாதைகள் என மொத்தம் 22 சுரங்கப்பாதைகள் மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களாகக் கண்டறியப்பட்ட இடங்களில் 60 உயர் அழுத்த டீசல் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பருவமழையின்போது தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 15 மண்டலங்களிலும் மொத்தம் 458 எண்ணிக்கையில் 5 அல்லது 7.5 குதிரைத்திறன் கொண்ட மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டு, தடையில்லா போக்குவரத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2 வாகனம் மூலம் மரம் அறுக்கும் இயந்திரங்கள், 160 கையில் எடுத்துச் செல்லக்கூடிய டீசல், பெட்ரோலால் இயங்கும் மர அறுவை இயந்திரங்கள், 11 மின் அறுவை இயந்திரங்கள் போன்றவை மண்டல அலுவலகங்களில் இருப்பு வைத்து மழைக்காலங்களில் மரங்கள் சாலைகளில் விழும்போது உடனுக்குடன் அகற்றி போக்குவரத்தை சீர்செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இரவு நேரங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட 18 உயர்கோபுர மின்விளக்குகளைத் தயார்நிலையில் வைத்திடவும், 138 நகர ஆரம்ப சுகாதார மையங்கள் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்திடவும், மழைக்காலங்களில் தொற்றுநோய்கள் பரவாமல் தடுத்திட 3,337 மலேரியா பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ள 420 கொசு மருந்து அடிக்கும் கைத்தெளிப்பான்கள், 245 கையால் புகை பரப்பும் இயந்திரங்கள், 41 வாகனம் மூலம் புகை பரப்பும் இயந்திரங்கள் ஆகியவை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழைநீர் பெருகும் தாழ்வான பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களை மீட்க 109 மீட்புப் படகுகளும், மீட்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திட 176 நிவாரண முகாம்களும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு ஒரே நேரத்தில் 1,500 நபர்களுக்கு உணவு தயாரித்திட 4 பொது சமையல் கூடங்களும், பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்திட 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவ குழுக்களும், 50 அம்மா குடிநீர் மையங்கள் மூலம் மழைக்காலங்களில் பாதுகாப்பான தரமான குடிநீரை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.