வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (25/10/2017)

கடைசி தொடர்பு:18:45 (25/10/2017)

விஸ்வரூபம் எடுத்த கந்துவட்டி பிரச்னை! - நெல்லைப் பயணத்தைத் திடீர் ரத்து செய்த அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர்

கந்துவட்டிக் கொடுமைக்கு இசக்கிமுத்து குடும்பத்தினர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காரணமாக, நெல்லையில் நடைபெற இருந்த டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த அமைச்சர் விஜய பாஸ்கர் அதில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

இசக்கிமுத்துநெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து அதே கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் ரூ.1.45 லட்சம் கடனாக வாங்கினார். அதற்கு 2.34 லட்சம் ரூபாய் கட்டிய நிலையில், மீண்டும் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார். இது தொடர்பாகக் காவல்நிலையத்தில் முத்துலட்சுமி புகார் செய்துள்ளார். அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட போலீஸார், விரைவில் பணம் கொடுக்குமாறு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் 5 முறையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒரு முறையும் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட அதிகாரிகளிடம் அளிக்கப்படும் புகார் மனு மீண்டும் அதே ஸ்டேஷனில் விசாரணைக்கு வந்ததால் போலீஸார், இசக்கிமுத்துவிடம் கடுமை காட்டி உள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த இசக்கிமுத்து 23-ம் தேதி மாவட்ட ஆட்சியர் மனு வாங்கும் அரங்கத்தின் முன்பாகவே குடும்பத்துடன் தீக்குளித்தார்.

இதில், இசக்கிமுத்துவின் மனைவி மற்றும் மகள்கள் உயிரிழந்த நிலையில், அவர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவரும் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராடி வருவதால், இசக்கிமுத்துவின் உடல் அரசு மருத்துவமனையிலேயே  வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சஷ்டி விழாவில் பங்கேற்ற பின்னர் நெல்லைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் டெங்கு விழிப்பு உணர்வு நிகழ்சியில் பங்கேற்ற பின்னர், பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு பாதித்தவர்களைப் பார்வையிடுவதுடன், மருத்துவர்களுடன் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து ஆலோசனை நடத்துவதாக இருந்தது. ஆனால், இசக்கிமுத்து இன்று மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவரது நெல்லை வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளது. அவரது வருகை ரத்தானதாக நெல்லை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.