வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (25/10/2017)

கடைசி தொடர்பு:08:49 (26/10/2017)

பாசனத்திட்டம் தந்த தியாகிக்கு விவசாயிகள் பாராட்டு விழா!


 

 

தங்கள் பகுதியில் உள்ள 2,07,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற காரணமான கீழ்பவானித் திட்டத்தைப் பெற்றுத் தந்த முன்னாள் ஈரோடு தொகுதி எம்,எல்.ஏ ஈஸ்வரன் சம்பந்தப்பட்ட விவசாயிகள் இன்று விழா கொண்டாடினர். அவரின் பிறந்தநாள் இன்று என்பதால் சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் வழியில் உள்ள தோப்புக்காடு அருகிலுள்ள வாய்க்கால் பாலத்துக்கு அருகில் அவரது படத்தை வைத்து வணங்கியதோடு, பெண்கள் பொங்கல் வைத்துப் படையலும் போட்டனர். பின்னர் அனைவரும் தங்களுக்கு விவசாயம் பண்ணத் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்த ஈஸ்வரன் படத்துக்கு முன்பு நெக்குருகியபடி வேண்டிக்கொண்டனர்.

'யார் அந்த ஈஸ்வரன், அவர் செய்த சாதனை என்ன' என்று அவருக்கு இன்று விழா கொண்டாடியவர்களில் ஒருவரான கீழ்பவானி பாசன பயனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த பொன்னையன் என்பவரிடம் பேசினோம்.

 "1905-ம் ஆண்டிலிருந்து கீழ்ப்பவானி பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த திட்டம்போட்டுத் தள்ளிக்கொண்டே போனது. இந்தத் திட்டம் நிறைவேறினால் இரண்டரை லட்சம் ஏக்கர் பாசனம் பெறும்ங்கிற சூழல். அப்போதுதான், 1946-ம் ஆண்டு ஈரோடு தொகுதியில் சுயேச்சையாக நின்று ஈஸ்வரன் எம்.எல்.ஏ-வாக ஜெயித்திருக்கிறார். அப்போது,காங்கிரஸூக்கும் எதிர்க்கட்சிக்கும் சமமாக எம்.எல்.ஏ எண்ணிக்கை இருக்க, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரகாசம் சுயேச்சை எம்.எல்.ஏ-வான ஈஸ்வரனின் உதவியை நாடினார். அப்போது அவரிடம் ஈஸ்வரன், 'நான் உங்களுக்கு ஆதரவு தருகிறேன். ஆனால், பதிலுக்கு பவானி ஆற்றின் குறுக்கேயான கீழபவானித் திட்டத்தை செயல்படுத்த உத்தரவாதம் தரணும்' என்று சொல்லி, ஆதரவு தந்திருக்கிறார். அதனால், பிரகாசம் முதலமைச்சராகி இருக்கிறார். ஆனால், முதலமைச்சரான பின்பு பிரகாசம் ஈஸ்வரனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையாம். அதனால், கோபமான ஈஸ்வரன், தனது ஆதரவை வாபஸ் வாங்குவதாகச் சொன்னதோடு, எம்.எல்.ஏ பதவியையே ராஜினாமா பண்ணப் போவதாகச் சொல்லிவிட்டு, ஊருக்கு வந்துவிட்டாராம். 


 

பதறிப்போன, முதல்வர் பிரகாசம் கோவை கலெக்டர் மூலமாக ஈஸ்வரனை சென்னைக்கு வரவழைத்து சமாதானப்படுத்தியதோடு, ஈஸ்வரன் கேட்ட கீழ்பவானித் திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார். இப்போது பதவியை வைத்து சொந்தபந்தங்களுக்குச் சொத்து சேர்க்கும் எம்.எல்.ஏ-க்களுக்கு மத்தியில், ஈஸ்வரன் தனது பதவியை மக்கள் திட்டத்துக்காகத் தூக்கி எறியவும் தயங்கவில்லை. அவர் பதினொன்றரை வருடங்கள் சுதந்திரப் போரில் ஈடுபட்டுச் சிறை சென்ற தியாகி. 'நாடு விடுதலை அடைந்தால்தான் நான் காலில் செருப்பும் திருமணமும் பண்ணிக்கொள்வேன்' என்று தனது 21 வயதில் சபதம் எடுத்திருக்கிறார். அதனால், நாடு விடுதலை பெற்றபோது அவருக்கு வயது 47. அதனால், அவருக்குத் திருமணமும் நடக்கவில்லை. காலில் செருப்பும் அணியவில்லை. வைக்கம் போராட்டத்தின்போது காவலர்களால் தாக்கப்பட்டு, கேரளக் காட்டுப்பகுதியில் வீசப்பட்டு, ஆடு மேய்க்கும் சிறுமியால் காப்பாற்றப்பட்டிருக்கிறார். அதேபோல், மற்றொருமுறை போராட்டத்தில் ஈடுபட்ட அவர் திம்பம் காட்டுக்குள் விடப்பட்டிருக்கிறார். இதுபோல் பலமுறை கொடுமை அனுபவித்திருக்கிறார்.


 

மற்றொருமுறை வார்தாவில் கைதுசெய்யப்பட்டு மீசை முடி ஒவ்வொன்றாக சிமட்டா என்ற குறடால் பிடுங்கப்பட்டிருக்கிறார். தனது இறுதிகாலம் வரை வறுமையிலேயே வாடி மடிந்திருக்கிறார். ஈரோட்டு போராட்ட வீரர்களான கந்தசாமி, எஸ்.பி.வெங்கடாசலம் போன்றவர்களும் தோழர் ஜீவானந்தம் போன்றவர்களும் இவருக்கு ஆண்டுக்கு ஆறு செட் வேட்டி, ஜிப்பா வாங்கி தந்திருக்கின்றனர். இறுதிக்காலத்தில் சோற்றுக்கே கஷ்டப்பட்ட அவர், சக சுதந்திரப் போராட்ட வீரரும், பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் இந்தியத் தலைவரும் பலமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரான க.ர.நல்லசிவத்திடம் அரிசி கேட்டு கடிதம் எழுதி இருக்கிறார். அப்படிப்பட்ட போற்றுதலுக்குரிய அந்தத் தியாகி ஈஸ்வரன் 1978-ல் காலமானார். அப்போதும், அவரை நாலு பேர் தூக்க,7 பேர் மட்டுமே உடன் சென்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தியாகி எந்த நாளில் இறந்தார் என்ற குறிப்புகூட இல்லை. ஆனால், அவர் பிறந்தது அக்டோபர் 25-ம் தேதி என்பது மட்டும் எங்களுக்கு தெரிந்தது. அதான், எங்களுக்கு இன்று கீழ்பவானி அணை மூலமாக வாழ்வளித்துக்கொண்டிருக்கும் அந்தப் பெருந்தியாகிக்கு நன்றி செலுத்தும்விதமாக அவரது பிறந்தநாளை இன்று கொண்டாடினோம். யார் யார் இன்றைக்கு நாட்டுல சாதனை எதுவும் பண்ணாமலேயே விழா கொண்டாடுறாங்க. நாங்க உண்மையான தியாகி, சாதனையாளரான ஈஸ்வரன் அய்யாவுக்கு விழா கொண்டாடியதைப் பெருமையாகக் கருதுகிறோம்" என்றார்.