வெளியிடப்பட்ட நேரம்: 18:27 (25/10/2017)

கடைசி தொடர்பு:08:43 (26/10/2017)

ஆதார் எண் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு!

அரசின் நலத்திட்டங்களுக்காக ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 2018-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் இந்தத் தகவலைத் தெரிவித்தார். ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு 2018 மார்ச் 31-ம் தேதி வரை அரசின் எந்தவிதமான நலத்திட்டங்களும் மறுக்கப்படாது என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் மாதம் 30-ம் தேதியிலிருந்து டிசம்பர் மாதம் 31-ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. 

ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்குவது, மண்ணெண்ணெய் மற்றும் உரத்துக்கான மானியம், நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் 135 வகையான நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டது. 
வங்கிக் கணக்குகள், செல்போன் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது சட்டவிரோதமானது என்று எதிர்த்தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்துக்குப் பதில் அளித்த அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், இதுதொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்டு திங்கள்கிழமை பதிலளிப்பதாகக் கூறினார்.