வெளியிடப்பட்ட நேரம்: 20:19 (25/10/2017)

கடைசி தொடர்பு:20:19 (25/10/2017)

"இப்போதேனும் ஃப்ளெக்ஸ் கலாசாரம் ஒழியட்டும்..!" - டிராஃபிக் ராமசாமி

ட்ராஃபிக் ராமசாமி

'ஃப்ளெக்ஸ் கலாசாரம்' தமிழ்நாட்டின் அடையாளமாகவே மாறிவிட்டது என்றால் மிகையில்லை. அரசியல் விழா என்றால், 5 கிலோ மீட்டர் தொலைவிலிருந்தே சாலை நெடுகிலும், உயரமான ஃப்ளெக்ஸ் மற்றும் பேனர்களை வைத்து மாஸ் காட்டுவார்கள் அரசியல்வாதிகள். இப்படி வைக்கப்படும் ஃப்ளெக்ஸ் மற்றும் பேனர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது அதன் தொடர்ச்சியாகப் பொதுமக்கள் உயிர் பலியாவது உள்ளிட்ட அவலங்கள் அரங்கேறிவருகின்றன. இதுகுறித்து அரசியல் கட்சிகளோ அரசியல்வாதிகளோ சிந்திப்பதும் கிடையாது. அவர்களின் நோக்கம் அரசியல்விழா பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதே. இந்த வெற்று விளம்பரத்துக்கு சற்றும் குறைவில்லாத வகையில், நவீன சினிமா உலகமும் தலைதூக்கியுள்ளது. முன்னணி நடிகர்கள் படம் வெளியானால், அவர்களின் ரசிகர்கள் 'ரசிகர் மன்றம்' என்ற பெயரில், பிரமாண்ட ஃப்ளெக்ஸ் மற்றும் பேனர்கள் அமைத்துக்கொண்டு அடிக்கும் லூட்டியும் அதனால் ஏற்படும் போக்குவரத்து பிரச்னைகளும் சொல்லி மாளாது. இந்த 'ஃப்ளெக்ஸ் கலாசார'த்துக்கு மொத்தமாக ரிவிட் அடித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். 

கட் அவுட்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் 'ஃப்ளெக்ஸ் கலாசார'த்தை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக கடந்த 24-ம் தேதி ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதாவது, "உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களோடு பொது இடங்களில் பேனர் வைக்கக் கூடாது. பொதுஇடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சுவர்களில் விளம்பரம் செய்து அதன் அழகைக் குறைக்கக் கூடாது. உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள்  ஃப்ளெக்ஸ், பேனர் போன்றவற்றில் இடம்பெறக் கூடாது. இதுகுறித்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இதை யாரேனும் மீறினால், அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவானது 'ஃப்ளெக்ஸ் கலாசார' அரசியல்வாதிகளுக்கும் திரையுலகத்தினருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பொதுமக்களோ இந்த உத்தரவைப் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

ஃப்ளெக்ஸ்

''ஃப்ளெக்ஸ் கலாசார'த்துக்கு எதிராகப் பல ஆண்டுகளாகவே நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தும் களத்தில் நேரடியாக இறங்கிப் போராடியும் வருபவர் டிராஃபிக் ராமசாமி. அவரிடம் நீதிமன்ற உத்தரவு குறித்து கேட்டோம், ''இந்த உத்தரவை நான் வரவேற்கிறேன். நான் மட்டுமல்ல... மக்கள் அனைவருமே இந்தத் தீர்ப்பால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரசியல்வாதிகளின் இந்த 'ஃப்ளெக்ஸ் கலாசாரம்' எப்படியாவது ஒழிந்தால் சரி. இதனால் எவ்வளவு போக்குவரத்து நெரிசல்கள்; எவ்வளவு விபத்துகள்; எவ்வளவு உயிர்ப்பலிகள்... இதை ஏன் அரசியல்வாதிகள் கண்டுக்கொள்ள மறுக்கிறார்கள். நானும் கடந்த 10 ஆண்டுகளாக இந்த 'ஃப்ளெக்ஸ்-க்கு எதிராகப் போராடி வருகிறேன். இதனால், தனிப்பட்ட முறையில் எத்தனையோ முறை அரசியல்வாதிகளால் தாக்கப்பட்டுள்ளேன். இப்போதுதான் எனக்கு சற்று நிம்மதியாக இருக்கிறது. ஃப்ளெக்ஸ் மற்றும் பேனர் இடையூறுகளால், இதுவரை தமிழகம் முழுவதும் நடைபெற்ற விபத்துகளில் மொத்தம்  32 பேர் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தை எந்த அரசியல்வாதிகளாவது நேரில் சென்று பார்த்தார்களா? மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இந்த அரசியல்வாதிகள் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்கள். அ.தி.மு.க., தி.மு.க, பி.ஜே.பி., காங்கிரஸ் என இருக்கிற அத்தனைக் கட்சிகளுமே இந்தத் தவற்றைத்தான் செய்துகொண்டிருக்கிறது. இதில் அ.தி.மு.க-வைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இப்படி ஒரு பழக்கத்தை அதிகளவில் கொண்டுவந்ததே இவர்கள்தான். இப்போது அந்த வேலையை பி.ஜே.பி செய்து வருகிறது. 

மெர்சல் பேனர்

தமிழகத்துக்கு எதிராக எடுக்கப்படும் முடிவுகளை எதிர்த்து மக்கள் போராடும்போது அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எவ்வளவு கருத்துகளை சொல்லிவருகிறார். ஆனால், அவர்கள் கட்சியினர் வைக்கும் ஃப்ளெக்ஸ்களால் மக்களுக்கு எவ்வளவு இடையூறு ஏற்படுகிறது என்பதைப் பற்றி மட்டும் ஏன் கருத்து சொல்லவில்லை. அரசியல்வாதிகளே இப்படித்தான். அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால், சினிமாக்காரர்கள் அதற்கு மேல்... வெற்று விளம்பரத்துக்கு ஆசைப்பட்டு தனது ரசிகர்களைக் காவு வாங்குகிறார்கள். சமீபத்தில் மெர்சல் படத்தின்போது பேனர் கட்டும் முயற்சியின்போது 14 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்து இறந்துள்ளான். இதற்கு அந்த நடிகரின் பதில் என்ன? நீங்கள் எந்த விளம்பரமாவது செய்துகொள்ளுங்கள். ஒன்றுமறியாத ரசிகர்களை ஏன் பலியாக்குகிறீர்கள். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திவரும் இந்த நடிகர்கள்தான் சினிமாவில் மக்கள் நலனுக்கான கருத்துகளைப் பேசிவருகிறார்கள். ஏன் இந்த ஏமாற்றுவேலை? இவர்கள் சினிமாவில் கருத்து சொல்வதற்கே தகுதியற்றவர்கள்.

பிஜேபி பேனர்

திருச்சியில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃப்ளெக்ஸ்களையும் பேனர்களையும் வைத்திருக்கிறார்கள். அதை நீக்குவதற்கு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தேன். கண்டிப்பாக அந்த விழாவில், ஃப்ளெக்ஸ் மற்றும் பேனர்கள் இருக்கக் கூடாது. இன்னொரு முக்கியமான விஷயம், 'இந்தத் தீர்ப்பைச் சொல்லிய நீதிபதி எஸ்.வைத்தியநாதனுக்கு மனமார்ந்த நன்றி'யைத் தெரிவித்துக்கொள்கிறேன். அந்த நீதிபதிக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். ஏனென்றால், அரசியல்வாதிகள் அவரையும் மிரட்டுவார்கள். இங்கு நீதிமன்றம் நல்லமுறையில்தான் செயல்படும். ஆனால், அரசியல்வாதிகளின் குறுக்கீடுகளால்தான் நீதிமன்றங்களால் நிம்மதியாகச் செயல்பட முடிவதில்லை. இந்தத் தீர்ப்பால், இனிவரும் காலங்களில் வெற்று விளம்பரக்காரர்களான அரசியல்வாதிகள் மற்றும் சினிமாக்காரர்களின் ஃப்ளெக்ஸ் கலாசாரம்' முடிவுக்கு வந்துவிடும்" என்றார் நம்பிக்கையோடு.

ஃப்ளெக்ஸ்

இந்த உத்தரவு, அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சியான உத்தரவாகவும் பொது மக்களுக்கு சந்தோஷமான உத்தரவாகவும் மாறியிருக்கிறது என்பது மட்டும் உண்மை!


டிரெண்டிங் @ விகடன்