வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (26/10/2017)

கடைசி தொடர்பு:07:32 (26/10/2017)

இனோவா கார் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் ரூ 3.5 லட்சம்.!  -  கோல்மால் செய்கிறதா கோவை மாநகராட்சி?

இனோவா பிரச்னையை கிளப்பும் சமூக ஆர்வலர் டேனியல்


கோவை மாநகராட்சி ஆணையருடைய இனோவா காருக்கு எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் பொருத்துவதற்கு 3.5 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளியாகியிருக்கும் தகவல் கோவை மக்களை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.

கோவை மாநகராட்சியினுடைய வரவு- செலவு கணக்கை சமூக ஆர்வலரான டேனியல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வாங்கியிருக்கிறார். அதில்தான் இனோவா கார் விவகாரம் வெடித்திருக்கிறது. டேனியலிடம் இதுகுறித்துப் பேசினோம், “2015 -ல் கோவை மாநகராட்சி கமிஷனருக்கு ஆனைமலை டொயோட்டோவில் இனோவா கார் வாங்கியிருக்கிறார்கள். அதற்கான எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கிற்கு மட்டும் 3.5 லட்சம் ருபாய் செலவு செய்திருப்பதாக கணக்குக் காட்டியிருக்கிறார்கள். 3.5 லட்சத்துக்கு அப்படி என்ன எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள் பொருத்தியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை? அந்தக் காருக்கு  60 ஆயிரம் ரூபாயில் எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள் வாங்கிவிடலாம். அப்படியே அதிகபட்சமாகப் போனாலும் கூட ஒரு லட்சத்தை தாண்டாது.

ஆனால், இவர்கள் இவ்வளவு பெரிய  தொகை செலவு செய்ததாக சொல்லியிருக்கிறார்கள். சரி.. அதுகூட பிரச்னையில்லை. தாராளமாக  செலவு செய்து நல்ல தரம் உயர்த்தி வைத்துக்கொள்ளட்டும். இந்த தொகையை கார் வாங்கிய நிறுவனத்தின் பெயரில்கூட  வழங்கவில்லை என்பதுதான் வேடிக்கையே. மாநகராட்சி உதவிப் பொறியாளரான ரவிக்குமார் பெயரில் அந்த தொகை வழங்கப்பட்டிருக்கிறது.  தனி நபரின் பெயரில் பணம் வழங்கவே கூடாது. ஆனால், மக்கள் பணத்தைக் கொள்ளை அடிப்பதற்காகத்தான் மாநகராட்சி அதிகாரியின் பெயரிலேயே பணத்தை கொடுத்திருக்கிறார்கள். ஆனைமலை டொயோட்டாவிலியே எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்குகள் கிடைக்கும். அந்த நிறுவனத்தின் பெயரிலேயோ அல்லது வேறு ஏதாவது நிறுவனத்தின் பெயரிலேயோ பணம் வழங்கியிருக்கலாம். அப்படி வழங்கினால் நேரடியாக அந்தப் பணம் அவர்கள் கைக்குப் போய்விடும். அதிலிருந்து இவர்கள் நையா பைசாகூட எடுக்க முடியாது. அதனால்தான், தனிநபர் பெயரில் போட்டு எடுத்திருக்கிறார்கள். சின்ன விஷயத்திலேயே இவ்வளவு கோல்மால்  செய்கிறார்கள் என்றால்  பெரிய பெரிய கான்ட்ராக்டுகளையெல்லாம் கேட்கவா வேண்டும்? என்கிறார் ஆதங்கமாக.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் விஜயகார்த்திகேயனிடம் விளக்கம் கேட்டோம், “அனைத்து விதிமுறைகளும், வழிமுறைகளும் சரியாக பின்பற்றப்பட்டிருக்கிறது.” என்பதோடு முடித்துக்கொண்டார்.

எல்லாம் இனோவாவுக்கே வெளிச்சம்!