வெளியிடப்பட்ட நேரம்: 06:45 (26/10/2017)

கடைசி தொடர்பு:07:20 (26/10/2017)

முருகப்பெருமான் தெய்வானை திருமணம் இன்று

பிரணவத்தின் உட்பொருளை சிவபெருமானுக்கே சொல்லித்தந்த தகப்பன் சாமியான முருகப்பெருமான் ஞானமே வடிவானவர். அந்த ஞானத்துக்குத் துணை செய்ய, செயல் வடிவமாக அவரோடு இணைந்தவர் தான் தெய்வானை பிராட்டியார். திருமாலால் தோற்றுவிக்கப்பட்ட அமுதவல்லியே, மறுபிறப்பில் இந்திரனின் மகளாகப் பிறந்து வளர்ந்தாள். தேவர்களை வாட்டி வதைத்த சூரபத்மனை சம்ஹரித்த சுப்பிரமணியருக்கு தனது மகளை கன்னிகா தானமாக கொடுத்தார் இந்திரன். முருகப்பெருமான், தெய்வானை திருமணம் சூரசம்ஹாரம் முடிந்த அடுத்த நாள் நடைபெற்றது.

தெய்வானை திருமணம்

அதன்படி இன்று எல்லா முருகன் மற்றும் சிவாலயங்களிலும் இந்த திருமணம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. தேவர்களின் விருப்பப்படி முருகப்பெருமான் தெய்வானையை மணந்துகொள்ள சம்மதித்தார். உடனே நான்முகன் திருமண வேலைகளைத் துவங்க, தேவரும் யாவரும் வந்து சேர்ந்தனர். பார்வதி, பரமேஸ்வரன் முன்னிலையில் மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, முருகப்பெருமானுக்கு தனது மகளின் கரம் பிடித்துக்கொடுத்து பாணிக்கிரஹணம் செய்தார் இந்திரன். வேதமுறைப்படி திருமாங்கல்ய தாரணம், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் போன்ற சகல சடங்குகளும் அந்த திருமணத்தில் சிறப்பாக நடந்தேறின. முருகரும் தெய்வானையும் பார்வதி பரமேஸ்வரனை வணங்கி ஆசி பெற்றனர் என்று கந்தபுராணம் இந்த திருமணத்தைப் பற்றி விரிவாக கூறுகிறது. திருப்பரங்குன்றத்தில்தான் முருகர், தெய்வயானை திருமணம் நடைபெற்றது என்று கூறப்பட்டாலும் எல்லா சிவாலயத்திலும் இந்தத் திருமண வைபோகத்தை இன்று தரிசித்து அருள் பெறலாம்.