வெளியிடப்பட்ட நேரம்: 09:35 (26/10/2017)

கடைசி தொடர்பு:11:14 (26/10/2017)

‘பேனர், ஃப்ளெக்ஸ், தொல்லையா...?’ இவர்களிடம் புகார் கொடுக்கலாம்..!

 

கட் அவுட்

அனுமதியின்றி பேனர் மற்றும் விளம்பரப் பலகைகள் வைத்தால், அதுதொடர்பாக புகார் அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு கண்காணிப்புக் குழுவை அமைத்துள்ளது. சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அந்தக் கண்காணிப்புக் குழுவிடம் சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்து, நிவாரணம் பெற முடியும். 

“தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமாக டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்படுவது போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கிறது; அவற்றை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும்'' என்று சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி பல வருடங்களாகச் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராஃபிக் ராமசாமி உள்பட பலரும் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ''சட்டவிரோத விளம்பரப் பலகைகள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் உள்ளிட்டவற்றை அகற்றும்படி, கடந்த 2011-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை சென்னை மாநகராட்சி அமல்படுத்தவில்லை. எனவே, சென்னை மாநகராட்சி கமிஷனர், மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்தார் டிராஃபிக் ராமசாமி. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'டிஜிட்டல் (மின்னணு பேனர்) பேனர், விளம்பர பலகைகள் மற்றும் பேனர்களை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்து உத்தரவிட்டது.

டிராபிக் ராமசாமி

உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைத்தது. அதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919, தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1981, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விளம்பரப் பலகைகள் உரிமம் வழங்குதல் மற்றும் விளம்பர வரி நிர்ணயம் மற்றும் வசூலித்தல் விதிகள் 2003 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (மின்னணு அச்சு விளம்பரப் பட்டிகை மற்றும் அட்டைகள் நிறுவிட அனுமதி) விதிகள் 2011 ஆகியவற்றின்படி விளம்பரப் பலகைகள் / மின்னணு அச்சு விளம்பரப் பட்டிகை மற்றும் அட்டைகள் போன்றவற்றை வைப்பதற்கான வழிமுறைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.

இச்சட்ட விதிகளின்படி, மாவட்ட ஆட்சியரின் முறையான உரிமம் / அனுமதி பெறாமல் எந்தவொரு நபரும் எந்தவொரு இடத்திலும் விளம்பரப் பலகைகள் / மின்னணு அச்சு விளம்பர பட்டிகை மற்றும் அட்டைகளை வைக்கக் கூடாது. இச்சட்ட விதிகளை மீறி, விளம்பரப் பலகைகளை வைப்போர் மீதும், இச்சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளை தடுப்போர் மீதும், சட்டப்படியான நடவடிக்கை மேற்கொண்டு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க அல்லது இந்த இரண்டும் விதிக்க சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று இச்சட்ட விதிகளை மீறி மின்னணு அச்சு விளம்பரம் பட்டிகை மற்றும் அட்டைகள் வைப்போர் மீது, சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொண்டு ஓர் ஆண்டுகாலம் சிறைத்தண்டனை அல்லது 5 ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்க அல்லது இந்த இரண்டு தண்டனைகளும் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் 09.01.2014 அன்று, நீதிப்பேராணை மனு எண்: 30233/2011 மற்றும் இதர நான்கு நீதிப்பேராணை மனுக்களில், தமிழ்நாட்டில் விளம்பரப் பலகைகள், மின்னணு அச்சு விளம்பரப் பட்டிகை மற்றும் அட்டைகள் வைப்பதை முறைப்படுத்துவது தொடர்பாக, தக்க ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் மற்றும் சட்ட விதிகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதை கண்காணிப்பதற்கு என்று அரசாணை (நிலை) எண்: 19 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (மா.ந.1) துறை, நாள்  02.02.2015-ல் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரனை தலைவராகவும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களான பி.ஏகாம்பரம் மற்றும் ஏ.எஸ்.ஜீவரத்தினம் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு, ''கண்காணிப்புக் குழு''வை தமிழக அரசு அமைத்துள்ளது.

கண்காணிப்பு குழு அறிவிப்பு

எனவே, விளம்பரப் பலகைகள் / மின்னணு அச்சு விளம்பரப் பட்டிகை மற்றும் அட்டைகள் போன்றவை வைக்க விரும்புவோர், உரிய அதிகார அமைப்பிடம் இருந்து சட்டப்படி முறையான உரிமம் / அனுமதிபெற்று, இவற்றை வைக்கும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சென்னை உயர் நீதிமன்றமானாது, இந்நிகழ்வினை கண்காணித்துவரும் நிலையில் சட்ட விதிகள் மீறப்பட்டு, இவை வைக்கப்படுமேயானால் அறிவிப்பு எதுவுமின்றி, இவைகள் அகற்றப்படுவதோடு சட்ட விதிகளை மீறுவோர் மீது மேற்குறிப்பிட்ட சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இதன்மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. 

பொதுமக்கள் இதுதொடர்பான ஆலோசனைகளை, "தலைவர், கண்காணிப்பு குழு, (விளம்பர பலகைகள், மின்னணு அச்சு விளம்பர பட்டிகை மற்றும் அட்டைகள் வைப்பதை முறைப்படுத்துதல்) சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை, 16, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை-600 003" என்ற முகவரியில் இயங்கிவரும் குழுவுக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, 2015-ம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு ஆண்டுக்குள் மீண்டும் கட்-அவுட், பேனர்கள், ஃப்ளெக்ஸ் கலாசாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தக் கண்காணிப்புக் குழுவின் செயல்பாடும் பெயரளவுக்கு மட்டுமே உள்ளது என்றும், இக்குழு செயல்பாடற்று உள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதனால்தான், இந்தப் பிரச்னை தற்போது சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ''திறந்தவெளிகள் அசுத்தப்படுவதைத் தடுக்கும் சட்டம் அமல்படுத்துவதை, அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும். பேனர்கள், ஃப்ளெக்ஸ் போர்டுகள், விளம்பர பலகைகள் வைப்பதற்கு அதிகாரிகள் அனுமதி கொடுத்தாலும் அவற்றில் உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஸ்பான்ஸர் செய்தவர்களின் புகைப்படம் இடம்பெறாமல் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். இதுகுறித்து, பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி வார்டுகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்'' என்று உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதியின் இந்த உத்தரவுக்குப் பிறகாவது, விளம்பரப் பலகைகள் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள கண்காணிப்புக் குழு தனது சட்டப்பூர்வ கடமையை செய்ய வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்