வெளியிடப்பட்ட நேரம்: 08:35 (26/10/2017)

கடைசி தொடர்பு:10:27 (26/10/2017)

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்குப் பருவமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஜூன் மாத வாக்கில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை நேற்றுடன் முடிந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், இன்றிலிருந்து வட கிழக்குப் பருவமழை தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியதாவது,

`தமிழகத்தில் நல்ல மழை பொழிவைக் கொடுத்த தென்மேற்குப் பருவமழை காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசத் தொடங்கி இருக்கிறது. தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, அடுத்த 48 மணி நேரத்துக்குள் தமிழகம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. வட கிழக்குப் பருவமழை இன்று தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், அப்படி நடக்கும் என்று சொல்லிவிட முடியாது. நாளை கூட வட கிழக்குப் பருவமழை ஆரம்பமாகலாம். தென்கிழக்கு தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்' என்று தெரிவித்துள்ளது.