வெளியிடப்பட்ட நேரம்: 11:02 (26/10/2017)

கடைசி தொடர்பு:11:02 (26/10/2017)

`டெங்கு பாஸ்கர் மீது நிலுவையில் இருந்த வழக்குகள் என்னாச்சு?' - மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று அவரது சொந்தத் தொகுதியான கொளத்தூருக்குச் சென்று பல இடங்களில் ஆய்வுமேற்கொண்டதோடு, நலத்திட்டங்களையும் தொடங்கிவைத்தார். 

மு.க.ஸ்டாலின்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், `ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்குமாறு ரயில்வே துறையினரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். இதுவரை என்ன நடந்தது என்பதுகுறித்தும் ஆய்வு நடத்தினேன். ஜி.கே.எம். காலனியில், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குடிநீர் சுத்திகரிப்புக்கான இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது என்றவரிடம், உள்ளாட்சித் தேர்தல்குறித்து கேள்வி எழுப்பினர், `ஏறக்குறைய ஓராண்டாக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லை. என் தொகுதிக்கு மட்டுமல்ல, மொத்த மாநிலத்துக்கும் அதேதான் நிலைமை. இதுவரை அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது வேதனைக்குரியது. இதனால்தான், பருவமழை தொடர்பான பணிகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். இருப்பினும் தி.மு.க-வினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளேன். இந்த அரசை பிரயோஜனமில்லை' என்றவரிடம்,

 `இரட்டை இலைச் சின்னம் அளிக்கப்பட்ட பிறகுதான் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறதே' என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, `அப்படி நடந்தால் அதைவிட ஒரு ஜனநாயகப் படுகொலை இருக்க வாய்ப்பே இல்லை. முன்னர் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதால்தான் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. அப்போது அ.தி.மு.க-வினர் பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதுகுறித்து இன்றுவரை எந்த முடிவும் தெரியவில்லை. குட்கா பாஸ்கர்... மன்னிக்கணும் டெங்கு பாஸ்கர் உள்பட பலர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளனவே' என்று கருத்து தெரிவித்தார்.