“அறிவு அழலை... ஆனா, எங்க ஏரியாவே அழுதது!” - நெகிழும் அற்புதம்மாள் #VikatanExclusive | Arputham Ammal shares her memories with Perarivalan when he was out on parol

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (26/10/2017)

கடைசி தொடர்பு:18:15 (26/10/2017)

“அறிவு அழலை... ஆனா, எங்க ஏரியாவே அழுதது!” - நெகிழும் அற்புதம்மாள் #VikatanExclusive

“ரெண்டு மாசம் போனதே தெரியல. என் பையன் என் வீட்டு வாசல்ல காலடி எடுத்து வைக்கிற வரைக்கும், ‘இனி என் பையன் வர்றான்னு நம்ப மாட்டேன்'னு சொல்லியிருந்தேன். ஏன்னா, ஒவ்வொரு முறை விடுதலைன்னு அறிவிச்சு, அதுக்கப்புறம் அது தள்ளிப் போனதுல நான் அவ்வளவு உடைஞ்சு போயிருந்தேன். சட்டுன்னு அவன் வந்ததும் கையும் ஓடல; காலும் ஓடல. எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. அவன் அக்கா அவனுக்குன்னு தோசை மாவு, அது இதுன்னு எடுத்துட்டு கிருஷ்ணகிரில இருந்து ஓடி வந்தா. `இட்லி வேணுமா, தோசை வேணுமா'னு கேட்டதுக்கு தோசை வேணும்னு அறிவு சொன்னான். ஒடனே தேங்கா சட்னி அரைச்சு அவதான் தோசை ஊத்திக் கொடுத்தா” என்று பரோலில் பேரறிவாளன் வந்த நாளை மெள்ள அசைபோடுகிறார் அற்புதம்மாள்.

அற்புதம்


“அறிவு இருந்த ரெண்டு மாசமும் வீடே கலகலன்னு இருந்தது. என்னோட மகள்கள், பேத்திகள், பேரன்னு எல்லாருமே அவங்க அவங்க அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுப்பு எடுத்துட்டு வந்துட்டாங்க. அதுவும் என்னோட சின்னப் பேத்தி ‘மாமாவை விட்டு எங்கேயும் வரமாட்டேன்'னு ஒரே அடம். ரெண்டு பொண்ணுங்களோட மாப்பிள்ளைகளுக்கும் அவ்வளவு பாசம்! சிறையில இருந்து கைதி வந்த மாதிரியே ஒரு நினப்பு இல்லை. ஏதோ வெளிநாடு போயி திரும்பி வந்தது மாதிரிதான் இருந்தது. திருமாவளவன் அறிவைப்  பார்க்க வரும்போது, அவனுக்கு ரொம்ப புடிக்குமேன்னு கித்தார் வாங்கி வந்து கொடுத்தார். ஒவ்வொரு நாளும் கித்தார், கீ போர்டு, பாட்டு, ஆட்டம்னு ஒவ்வொரு நிமிஷமும் பொன்னாப்போச்சு. குடும்ப உறவுகள் மட்டுமில்லாம வெளியில இருந்து நிறைய பேர் அறிவைப் பார்க்க  வந்தாங்க. பலகாரம், உடைன்னு அவங்க வாங்கி வர, வீடே திருவிழாக்கோலமா இருந்தது. இதுலயும் யார் வாங்கிட்டு வர்ற சட்டைய அறிவு உடுத்துவார்னு போட்டி. புதுசா ஒரு குழந்தை பிறந்தா அந்த வீடு எப்படி இருக்குமோ, அந்த மாதிரி இருந்தது” - தன் வாழ்வின் அற்புத கணங்களை விவரிக்க வார்த்தைகளில்லாமல் நெகிழ்கிறார் அற்புதம் அம்மாள்.அற்புதம் அம்மாள்

`என்ன என்னவோ நிறையத் திட்டங்கள் எல்லாம் வெச்சிருந்தீங்களேமா…' என்றால், “என்னவோ போம்மா. அவன பாத்த நிமிடத்துல எல்லாம் மறந்துப் போச்சு. அவன்  சகோதரிகளோட திருமண கேசட்டை டெக்ல போட்டு அவனுக்குக் காட்டணும்னு பத்திரப்படுத்தி வெச்சிருந்தேன். ஆனா, அதைப் போடுற டெக் எங்க ஊர்ல எதுவும் கெடைக்கல. சென்னை மாதிரியான வசதி இங்க இல்லையே. அதை எல்லாம் `சிடி'யா மாத்தணும். அப்புறம் போட்டுக்காட்டணும்” என்றவர், பேரறிவாளன் வீட்டில் இருந்த நிமிடங்களைப் பற்றி தொடர்கிறார்.

“என் சின்னப்பேத்தி கூடதான் ஒரே சண்டை. அவ விளையாட கூப்பிட, இவன் `இல்லை'ங்க அவ உடனே பேசமாட்டேன்னு மிரட்டன்னு, ரெண்டு பேரும் ஒரே அக்கப்போருதான். போகும்போது அவகிட்ட சொல்லுறப்பதான் கொஞ்சம் தடுமாறினான். ஆனா, சுதாரிச்சு கட்டுப்படுத்திக்கிட்டான். ஊர்க்காரவங்க எல்லாம் அப்படி ஆச்சர்யப்படுறாங்க... இப்படிப்பட்ட ஒரு தங்கமான புள்ளைக்கு இந்த மாதிரியான்னு. ‘நாங்க செய்தில படிச்சு என்னவோன்னு நெனச்சோம். அதுக்கெல்லாம் எங்கள மன்னிச்சிரு அறிவு’ன்னு சொல்றாங்க. ‘இனி அறிவைப் பாக்கப்போகும்போது, எங்களையும் அழைச்சுட்டுப் போங்க’ன்னு சொல்றாங்க. பரோல் முடிஞ்சு போகும்போது அவன் அழல. ஆனா, எங்க ஏரியாவே அழுதது. அறிவு அன்பை சம்பாதிச்சிருக்கான். அறிவோட எந்தக் குணாதிசயமும் மாறவே இல்லம்மா. அப்படியே இருக்கான். ரொம்பவே இயல்பா இருக்கான். சிரிச்சிட்டே இருக்கான். ஆனா, என்னால அப்படி இருக்க முடியலையே!” - தழுதழுக்கும் குரலில் பேச முடியாமல் அவர் தவிக்கும்போது, நமக்கும் தொண்டை அடைக்கிறது.

இரண்டு மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு, தந்தையின் உடல்நிலை காரணமாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு கேட்டு மனு அளித்திருந்தார் அற்புதம்மாள். ஆனால், அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இரண்டு மாத பரோல் முடிந்து சிறைக்குக் கையசைத்தபடியே பேரறிவாளன் செல்ல, அற்புதம்மாள் அழுதபடியே கையசைக்கும் காட்சி உண்மையிலேயே அனைவருக்கும் மனதை உறையவைத்தது.

பேரறிவாளன்

“அடுத்தடுத்து `MDMA' வழக்கும், இவர்களுடைய விடுதலை குறித்த வழக்கும் நீதிமன்றத்துக்கு வருது. இனி நாங்க பரோல் எல்லாம் கேக்கப் போறது இல்ல. எங்களுக்கு இனி விடுதலைதான் வேணும். யார் யாரோ வெளியில இருக்கும்போது, அறிவு மாதிரி ஒரு புள்ள உள்ள இதுக்கு மேலயும் இருக்கக் கூடாது. ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவரே அறிவு குற்றவாளி இல்லை என்று சொல்லிவிட்டார். அவன் உள்ள இருக்குறது நீதிக்குதான் இழுக்கு” - உறுதியுடன் சொல்லும் அற்புதம்மாள், “இந்த வழக்கில் சோனியா காந்தி இதற்கு மேலும் மௌனம் காக்கக் கூடாது. ராஜீவ் காந்தியின் மரணம் அவர்களுடைய வீட்டில் ஏற்படுத்திய தாக்கம் புரிகிறது. ஆனால், அதில் தண்டிக்கப்பட்டிருக்கும் யாரும் காரணம் இல்லை எனும்போது, அவர் இதைப் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும் இல்லையா?” என்னும் அறிவின் தாய், “ஒரு தாயாக சோனியா காந்தி தன்னுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார். 

இந்தத் தாயின் உணர்வுகளை, அந்தத் தாய் உணர்ந்துகொள்வாரா? ’அம்மா’ இரண்டு முறை அறிவித்த விடுதலையை, அதே அம்மாவின் ஆட்சியைத் தொடர்வதாக சொல்பவர்கள் அதே பிடியில் நின்று நிறைவேற்றி, இந்த அம்மாவின் பிள்ளையை மீட்டு தருவார்களா... இல்லை, சின்னத்தை மீட்பதில்தான் மொத்த வலிமையையும் செலுத்துவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்