திரும்பும் திசையெல்லாம் கட் அவுட்டுகள்.. நீதிமன்ற உத்தரவைக் காற்றில் பறக்கவிடும் தமிழக அரசு

நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிடும் தமிழக அரசு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக திருச்சியில் திரும்பும் திசையெல்லாம் கட் அவுட்டுகள் வைத்து, நீதிமன்ற உத்தரவைக் காற்றில் பறக்கவிட்டுள்ளது தமிழக அரசு.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக திருச்சி மாநகர் முழுவதும் பிரமாண்டமான கட் –அவுட்டுகள், வரவேற்பு நுழைவாயில்கள் எனத் திரும்பும் திசையெல்லாம் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருச்சி விமான நிலையம் முதல் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலை வரை கிட்டத்தட்ட 12 கிலோமீட்டர் வரை பேனர்கள் அணிவகுத்து நிற்கின்றன. நிகழ்ச்சி நடைபெறும் ஜி.கார்னர் மைதானத்திலும் ஏற்பாடுகள் ஜரூராய் நடந்துவருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்பதாலும், திருச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டி.டி.வி தினகரன் நடத்திய பிரமாண்டமான கூட்டத்துக்குப் போட்டியாக இந்தக் கூட்டத்தை எடப்பாடி தரப்பு நினைப்பதால், 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களை அழைத்துவருவோம் என நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துவரும், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறிவருகின்றார்.

இந்த விழாவில் ரூ.212 கோடி மதிப்பிலான 13 முடிந்த திட்டப்பணிகளை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தும், ரூ.457 கோடியே 31 லட்சத்து 62 ஆயிரம் மதிப்பிலான 45 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், 32 ஆயிரத்து 661 பயனாளிகளுக்கு ரூ.102 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்குகிறார். இந்த விழாவுக்காக திருச்சியில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள பல தனியார் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிடும் தமிழக அரசு

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் வழங்கிய உத்தரவுப்படி, உயிரோடு இருக்கும் நபர்களுக்குக் கட் –அவுட் வைக்கக் கூடாது என்கிற உத்தரவு வழங்கப்பட்ட பிறகும்கூட, திருச்சியில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் படங்களோடு,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் படங்கள் பளபளக்கின்றன. ஆனாலும் திருச்சி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்படாமல் உள்ளது. நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், திருச்சி முழுக்க வைக்கப்பட்டுள்ள பேனர்கள் வைத்திருப்பதுகுறித்து திருச்சி வழக்கறிஞர் கென்னடி, திருச்சி மாநகர காவல் ஆணையர், திருச்சி மாநகர ஆணையர் ஆகியோரிடம் மனுக்கொடுத்தார். ஆனாலும் கட்–அவுட்டுகள் அப்படியே உள்ளன. இந்த விழாவுக்காக எடப்பாடி பழனிசாமி இன்றும், துணை முதல்வர் பன்னீர் செல்வம் நேற்று இரவு திருச்சி வருகை தந்துள்ளார்கள்.

திருச்சி வந்துள்ள எடப்பாடி பழனிசாமி பட்டுக்கோட்டையில் நடக்கும், எம்.எல்.ஏ. சி.வி.சேகர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்கிறார். அவர் மீண்டும், அங்கிருந்து கிளம்பி, இன்று மதியம் 3 மணியளவில்  நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்கிறார். அதோடு, சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது, விழா மேடையின் முன்பு, 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால், திருச்சி ஜி.கார்னர் மைதானத்துக்கு வரும் தொண்டர்கள் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றனர். பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோதும், கொஞ்சம் பீதியிலேயே இருக்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!