மைதானத்தில் நடைப்பயிற்சி செய்ய கட்டணம்! தமிழக அரசின் அறிவிப்பால் கொதித்த வீரர்கள்

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் உடற்பயிற்சி செய்வதற்கும் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கட்டணம் வசூலிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து  நடைப்பயிற்சியாளர்கள்  மற்றும் தூத்துக்குடி தருவை மைதானம் உபயோகிப்பாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

protset against pyament  scheme in thoothukudi govt ground

தருவை மைதானம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய தூத்துக்குடி தருவை மைதானம் உபயோகிப்பாளர்கள் நலச்சங்கத் தலைவர் உபால்டு வால்டர், ‘’தூத்துக்குடி மாவட்டத்தில் மக்களின் உடல்நலம் பேண பல இடர்பாடுகளுக்கு இடையில் உருவாக்கப்பட்ட இடம்தான் தருவை மைதானம். இந்த விளையாட்டிடம் தூத்துக்குடி நகராட்சியில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு பொதுமக்களின் உடல்நலம் மற்றும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக மட்டுமே உபயோகிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு மைதானம் பல்திறன் விளையாட்டுப் பயிற்சியை பெறும் இடமாக மட்டும் இல்லாமல் பள்ளி, கல்லூரி ஏழை மாணவர்களும் வந்து பயிற்சி பெற்று மாநில மற்றும் தேசியப் போட்டிகளில் பங்குபெற்று மாநில போட்டிகளில் வெற்றிபெற்று மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்துக்கொண்டு வருகிறார்கள். மேலும், இங்கு பயிற்சி பெற்றதன் மூலம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், காவல்துறை, ராணுவம் , மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணி கிடைத்து பணியாற்றி வருகிறார்கள்.

ஆனால், சில தினங்களுக்கு முன்பு இந்த மைதான நோட்டீஸ் போர்டில், மருத்துவரின் ஆலோசனைப்படி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நோயாளிகள் குறிப்பாக ரத்தக் கொதிப்புடையோர், சர்க்கரை நோயாளிகள், வயதானவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பள்ளி, கல்லூரி விளையாட்டு வீரர்கள் என தனித்தனி பிரிவாக பிரித்துக் கட்டணம் பட்டியலிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ளது.  பாரத பிரதமரின் கனவான வரும் 2020ல் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா உலக அளவில் பதக்கங்கள் பெற்று முதலிடத்தை எட்டிப் பிடிக்க வேண்டும் என பல திட்டம் தீட்டி வரும் சூழலில், வியாபார நோக்கில் பணம் பறிக்கும்  நினைப்பில் இப்படி ஒரு  கட்டண அறிவிப்பை அறிவித்து ஏழைப் பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்களின் எதிர்காலக் கனவை தகர்க்கும் விதமாக செயல்படுத்தப்பட உள்ள திட்டத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உடனடியாக ரத்துசெய்ய வேண்டும்’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!