'என்.எல்.சி-க்கு நிலம் கொடுத்தவர்களை பங்குதாரர் ஆக்குங்கள்..!' - மத்திய அரசை வலியுறுத்தும் வேல்முருகன் | Velmurugan statement regarding nlc shares

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (26/10/2017)

கடைசி தொடர்பு:14:50 (26/10/2017)

'என்.எல்.சி-க்கு நிலம் கொடுத்தவர்களை பங்குதாரர் ஆக்குங்கள்..!' - மத்திய அரசை வலியுறுத்தும் வேல்முருகன்

 

neyveli lignite

''நிலம் வழங்கியவர்களுக்கு நிலத்துக்கான இழப்பீடு, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என அளித்த வாக்குறுதியை இன்றுவரை சரிவர நிறைவேற்றவில்லை என்.எல்.சி. எனவே, நிலம் கொடுத்தவர்களை என்.எல்.சி-யின் பங்குதாரர்களாக ஆக்க வேண்டும்'' என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன்,  மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் கழகத்தின் (என்.எல்.சி) 15 சதவிகிதப் பங்குகளை மோடியின் நடுவண் பா.ஜ.க அரசு விற்கப் போவதாக அறிவித்திருக்கிறது. 2017-18-ம் ஆண்டில் அரசின் வருவாய் ரூ. 1.10 லட்சம் கோடி அளவுக்குக் குறையும் என கணக்கிட்டு, அதை ஈடுகட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்று முடிவு செய்திருக்கிறது மோடி அரசு. அந்த வகையில் என்.எல்.சி-யில் 15 சதவிகிதப் பங்குகளை ரூ.2,500 கோடிக்கு விற்பனை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.

என்.எல்.சி-யின் பங்குகளில் 89.32 விழுக்காடு நடுவண் அரசிடமும், 4.06 விழுக்காடு வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமும், 3.91 விழுக்காடு தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களிடமும், 0.96 விழுக்காடு காப்பீட்டு நிறுவனங்களிடமும் உள்ளன. 'நடுவண் அரசிடம் 75 விழுக்காட்டுக்கும் அதிகமான பொதுத்துறை நிறுவனப் பங்குகள் இருக்கக் கூடாது' என்கிற கொள்கை முடிவின்படியே என்.எல்.சி-யின் 15 விழுக்காடு பங்குகளை விற்கப் போவதாகக் கூறுகிறது மோடி அரசு. இதில் நியாயமே இல்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

முன்பு 2013-ம் ஆண்டு, காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய அரசு, என்.எல்.சி-யின் 5 விழுக்காடு பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய இருந்தது. அதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளுமே கடுமையாக எதிர்த்தது. தமிழக அரசே அந்தப் பங்குகளை வாங்கி, பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்தது. தமிழக அரசு அந்தப் பங்குகளை வாங்கியதன் மூலம் அது மக்களுக்குப் பொதுவான சொத்து என்பது மீண்டும் நிலைநிறுத்தப்பட்டது.

வேல்முருகன்

இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், மக்கள் சொத்தை தனியார் நிறுவனங்களுக்கு விற்கக்கூடாது. அந்தச் சொத்துக்குத் தொடர்புடைய மக்களையும் பங்குதாரர்களாக அங்கீகரித்து நிறுவனத்தின் வளர்ச்சியைப் பெருக்குவதே நியாயமாக இருக்கும். 1956-ம் ஆண்டு என்.எல்.சி தொடங்கப்பட்டது. அதற்கான நிலக்கரி வளம் நிறைந்த நிலங்களை அங்குள்ள 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள்தான் அளித்தார்கள். அவர்களின் வீட்டுமனை மற்றும் விளைநிலங்களில் செயல்பட்டுத்தான் என்.எல்.சி இன்று ஆண்டுதோறும் ரூ.2500 கோடிக்கும் மேல் லாபம் ஈட்டி வருகிறது.

ஆனால், அப்படி நிலம் வழங்கியவர்களுக்கு நிலத்திற்கான இழப்பீடு, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என அளித்த வாக்குறுதியை இன்றுவரை சரிவர நிறைவேற்றவில்லை என்.எல்.சி.  இதனால் நிலம் கொடுத்தவர்களை என்.எல்.சி-யின் பங்குதாரர்களாக ஆக்கிவிடுவதுதான் இதற்கான ஒரே தீர்வு என்று சொல்லி, அந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

எனவே, என்.எல்.சி-யின் பங்குகளை விற்பது அல்லது கைமாற்றுவது போன்ற எந்த முடிவையும் அதற்கு நிலம் வழங்கிய மக்களின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கக்கூடாது. இதே நிலையில்தான் என்.எல்.சி-யின் ஒரு சதவிகிதப் பங்கைக்கூட தனியார் துறைக்கு விற்கக்கூடாது. நாட்டின் சொத்துகளைக் கட்டிக்காக்க வாக்களித்தோமே தவிர, அவற்றை விற்பதற்கு அல்ல. அப்படி சொத்துகளை விற்றுத்தான் சாப்பிட வேண்டும் என்றால், இங்கு அரசு என்பதே இருந்து பயன் என்ன? கையாலாகாத ஆட்சியாளர்கள் விலகிக்கொள்ள வேண்டுமே தவிர, என்.எல்.சி உட்பட மக்கள் சொத்துகளை விற்க முயல்வது அறிவார்ந்த செயலல்ல. இத்தகைய செயல்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிப்பதுடன் என்.எல்.சி-யின் 15 சதவிகிதப் பங்குகளைத் தனியார் துறைக்கு விற்கும் முடிவை மோடி அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறது'' என்று கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க