வெளியிடப்பட்ட நேரம்: 13:32 (26/10/2017)

கடைசி தொடர்பு:13:52 (26/10/2017)

''ஆக... எல்லாமே நடிப்புதானா திரு எடப்பாடி பழனிசாமி அவர்களே...!''

பேனர்

திருச்சியில் இன்று நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் கட்-அவுட்கள், அவர்கள் இருவரின் ஆதரவாளர்களால், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'திறந்த வெளியிடங்களில் உயிரோடு இருப்பவர்களின் படங்களைப்போட்டு ஃப்ளக்ஸ் பேனர்கள், விளம்பரப் பலகைகள் வைக்கக்கூடாது' என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், அக்டோபர் 24-ம் தேதி உத்தரவிட்டார். இதுகுறித்து தலைமைச் செயலாளர், உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையாக தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி அந்த உத்தரவில் கூறியுள்ளார். இதை கிஞ்சிற்றும் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், திருச்சியில் தமிழக அரசு சார்பில்  நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழா கொண்டாட்டங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. 

திருச்சி மாநகரமே திக்குமுக்காடும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வம் ஆதவாளர்களும் போட்டிபோட்டு பேனர்கள், கட்-அவுட்கள், தோரணங்கள், விளம்பரப் பலகைகளை வைத்துள்ளனர். ஆனால், இதே எடப்பாடி பழனிசாமிதான், மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின்படி, தன் காரில் இருந்த முக்கியப் பிரமுகர்களுக்கான சிவப்பு விளக்கை அவரே 20.04.2017 அன்று அகற்றினார். மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமி கூறுகையில், ''மக்களோடு மக்களாக பயணம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் பிரதமர் ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் முதல்வர் என்ற முறையில் என்னுடைய காரில் பொருத்தப்பட்டு இருந்த சிவப்பு விளக்கை நானே அகற்றினேன்'' என்று கூறினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் காரில் இருந்து சிவப்பு விளக்கை அகற்றுவது போன்ற புகைப்படம் மற்றும் அவர் வீடு திரும்பும்போது காரில் சிவப்பு விளக்கு இல்லை என்பதை உறுதி செய்யும் வகையிலான மற்றொரு புகைப்படத்தையும் தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை வெளியிட்டு, அந்தப் புகைப்படங்கள் அனைத்து டிவி மீடியாக்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்தன. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி பிரதமர் மோடி, காரில் உள்ள சிவப்பு விளக்குகளை அகற்ற வேண்டும் என்று சொன்ன அடுத்தநாளே அவரின் உத்தரவை அப்படியே அமல்படுத்தி தனது விசுவாசத்தை காட்டினார் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி

ஆனால், இப்போது சென்னை உயர் நீதிமன்றம் விளம்பரப் பேனர்களை வைக்கக்கூடாது என உத்தரவிட்டும், அதை மதிக்காமல் அரசு விழா, திருச்சியில் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது. அந்த விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட தமிழக அமைச்சர்கள் படையே கலந்துகொள்கிறது. அன்று, ''பிரதமர் சொல்லிவிட்டார்; மக்களோடு மக்களாகப் பயணம் செய்யப்போகிறேன்'' என்று தெரிவித்து ஆடம்பரத்தை, விளம்பரத்தை விரும்பாதவர் என்று தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கை இன்று வேறுவிதமாக இருக்கிறது. 

இதுகுறித்து அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். 

அவர்கள் கூறுகையில், ''அ.தி.மு.க தலைமைக் கழகம் சார்பில் 04.08.2012 அன்று ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், 'சமீபகாலமாக நடைமுறைக்கு மாறாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன. நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் படங்களை வெளியிட அனுமதி இல்லை. எனவே, கழகத்தினர் இனி வரும் காலங்களில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்களை மட்டுமே விளம்பரங்களில் பயன்படுத்த வேண்டும். மற்றபடி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் பெயரை எழுத்தில் குறிப்பிட்டாலே போதுமானது. இதை மீறி கட்சி நிர்வாகிகள் செயல்பட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அறிவிப்பு முதல்வர் ஜெயலலிதா ஒப்புதலின்பேரில் வெளியிடப்படுகிறது' என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

'ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி செயல்படுகிறோம்' என்று தினசரி சொல்லிக் கொள்ளும் முதல்வர் எடப்படி பழனிசாமி, ஜெயலலிதா உத்தரவுகளையே காலில் போட்டு மிதிக்கிறார். உயர் நீதிமன்ற உத்தரவையும் மதிப்பது இல்லை' என்ற நிலையில்தான் அவரது போக்கு இருந்துகொண்டு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், பெரியார், அண்ணா படங்களையோ, கட் அவுட்களையோ அவர்கள் வைப்பது இல்லை. மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது கட் அவுட்களை மிஞ்சும் அளவுக்கு போட்டி போட்டுக்கொண்டு எடப்பாடியும், பன்னீரும் தங்களுக்கு கட் அவுட் வைத்துக்கொள்கிறார்கள். இவர்களிடமிருந்து நீங்கள் எதை எதிர்பார்க்கிறீர்கள்'' என்று எதிர்கேள்வியோடு முடித்தார்கள் அவர்கள்.

இந்த நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும்போது, 'எல்லாம் நடிப்புதானா எடப்பாடி பழனிசாமி அவர்களே..!' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்