“வருமானவரித் துறையே அந்தரத்தில் இருக்கிறது... கொண்டாட்டம் எதற்கு?” - ஸ்டாலின் பாய்ச்சல்! | Stalin's statement on Sekar reddy issue

வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (26/10/2017)

கடைசி தொடர்பு:17:15 (26/10/2017)

“வருமானவரித் துறையே அந்தரத்தில் இருக்கிறது... கொண்டாட்டம் எதற்கு?” - ஸ்டாலின் பாய்ச்சல்!

ஸ்டாலின்

“நவம்பர் 8-ம் தேதியைக் கறுப்புப் பண ஒழிப்புத் தினமாக மத்திய அரசு கொண்டாடுவதற்கு முன், குட்கா முதல் சேகர் ரெட்டிவரை வருமானவரித் துறை நடத்திய ரெய்டுகள் எல்லாம் அந்தரத்தில் இருப்பது மத்திய அரசுக்குத் தெரியாதா” என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழகத்தில் மணல்குவாரிகளை நடத்திவந்த சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக அவருக்கு நெருக்கமான மேலும் சிலருடைய வீடுகளிலும் ஆய்வு நடத்தப்பட்டுப் பல கோடி ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.  இதில், சேகர் ரெட்டியின் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் 33.6 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ரூபாய் நோட்டுகள், ஒரே வரிசை எண் கொண்டதாக இருந்ததால் அதுகுறித்து வருமானவரித் துறை தீவரமாக விசாரணை மேற்கொண்டது. இந்த வழக்கை சி.பி.ஐ. தற்போது விசாரித்து வருகிறது.

 இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்துவரும் சி.பி.ஐ., 'சேகர் ரெட்டிக்குப் புதிய ரூபாய் நோட்டுகள் எந்த வங்கி மூலம் கிடைத்தது' என்று ரிசர்வ் வங்கியிடம் கேட்டுள்ளது. ஆனால், 'ரிசர்வ் வங்கி அந்தத் தகவல் எங்களிடம் இல்லை' என்று சொல்லியுள்ளது. இந்த வழக்கு விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பணமதிப்பிழப்பு நாளான வரும் நவம்பர் 8-ம் தேதியை கறுப்புத் தினமாகக் கொண்டாடப்போவதாக எதிர்க் கட்சிகள் அறிவித்துள்ளன. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியோ, அதே நவம்பர் 8-ம் தேதியைக் கறுப்புப் பண ஒழிப்பு தினமாகக் கொண்டாடப்போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், ''வருமானவரித் துறையில் சிக்கிய கறுப்புப் பணத்தின் வழக்கே அந்தரத்தில் இருக்கும்போது, கொண்டாட்டம் எதற்கு'' என்று தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்  தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ''பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தியது வருமானவரித் துறை. அதில், 170 கோடி ரூபாய்க்கு மேல் பணமும், 178 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதாக அப்போதே செய்திகள் வெளிவந்து தமிழகத்தை வியப்பில் ஆழ்த்தின. ஆனால், இந்த விசாரணை அடுத்தகட்டத்துக்கு நகராமல் பின்னடைவு ஏற்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ-யால் சேகர் ரெட்டிக்கு எப்படிப் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன. அந்த ரூபாய் நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து பெறப்பட்டன போன்ற முக்கிய அடிப்படைத் தகவல்களைப் பெற முடியாமல் திணறி நிற்கிறது.

சேகர் ரெட்டி

மஹாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அதேபோல, கர்நாடகத்திலும், மேற்கு வங்கத்திலும் உள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனங்கள் இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ஆனாலும், சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட புதிய 2,000 ஆயிரம் நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து வாங்கப்பட்டன என்பதை சி.பி.ஐ-யால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது எவராலும் நம்ப முடியாததாக இருக்கிறது. 

சேகர் ரெட்டி எங்கிருந்து 2,000 ரூபாய் நோட்டுகளைப் பெற்றார் என்பதையும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதோடு, 'அந்தத் தகவல் எங்களிடம் இல்லை' என்று ரிசர்வ் வங்கியே சி.பி.ஐ-க்குத் தெரிவித்திருப்பது, ஒட்டுமொத்த விசாரணையையே முடக்கி வைத்துள்ளது. 
ஏற்கெனவே, கன்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் திருப்பூரில் பிடிபட்ட வழக்கும், கரூர் அன்புநாதன், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், முன்னாள் சென்னை மாநகர மேயர் சைதை துரைசாமி ஆகியோர் மீதெல்லாம் நடத்தப்பட்ட வருமானவரித் துறை ரெய்டுகளும் தூசு படிந்து, உண்மைகள் வெளிவராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 

அதேநேரத்தில், 'சேகர் ரெட்டி விவகாரத்தில் புதிய நோட்டுகளைக் கொடுத்த வங்கி விவரம் தெரியவில்லை. குட்கா விசாரணையில் வருமானவரித் துறையின் அறிக்கையே காணவில்லை, 570 கோடி ரூபாய் விவகாரத்தில் கன்டெய்னர்கள் போனது தேர்தல் ஆணையத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும் தெரியவில்லை', போன்ற பல விசித்திரமான செய்திகள் தொடர்ந்து வெளிவந்தபடி இருக்கின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பும் பின்பும் வருமானவரித் துறை நடத்திய ரெய்டுகள் எல்லாம் தமிழகத்தைப் பொறுத்தவரை இப்படி அந்தரத்தில் தொங்கிக்கொண்டு நிற்கின்றன. இந்நிலையில், எதிர்க் கட்சிகள், நவம்பர் 8-ம் தேதியைக் ‘கறுப்புத் தினம்’ என்று அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன. இதற்குப் போட்டியாக, ‘கறுப்புப் பண ஒழிப்புத் தினம் கொண்டாடப் போகிறோம்’ என்று நாட்டில் சட்டம் -ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்றைய தினம் அறிவித்திருக்கிறார்.

 ‘கறுப்புப் பண எதிர்ப்பு தினம்’ கடைப்பிடிக்கும் இந்தச் சமயத்திலாவது, மணல் மாஃபியா சேகர் ரெட்டி உள்ளிட்ட தமிழகத்தில் பல அமைச்சர்கள், அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை ரெய்டுகள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும், சேகர் ரெட்டிக்குப் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தன என்ற விவரங்களை ரிசர்வ் வங்கி உடனடியாகச் சி.பி.ஐ-க்கு அளித்து, சேகர் ரெட்டிமீது வருமானவரித் துறை தெரிவித்த குற்றச்சாட்டுகளின் மீதான நடவடிக்கைகள் நீர்த்துவிடாமல் தடுத்து நிறுத்த வேண்டும்” என்றும் அதில் தெரிவித்துள்ளார். 


டிரெண்டிங் @ விகடன்