வெளியிடப்பட்ட நேரம்: 17:52 (26/10/2017)

கடைசி தொடர்பு:17:52 (26/10/2017)

'தற்கொலை செய்துகொள்வேன்!' - நடிகை ஆனந்தியின் கந்துவட்டிக் கதறல்

 சீரியல் துணை நடிகை ஆனந்தி

'என்னுடைய கந்துவட்டிப் புகாருக்கு போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதைவிட வேறுவழியில்லை' என்று கண்ணீர்மல்க சீரியல் துணை நடிகை ஆனந்தி தெரிவித்தார்.

 நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கந்துவட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட குடும்பம், தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கந்து வட்டிப் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர், காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்காகச் சட்டம் இருந்தாலும் ஏனோ அதிகாரிகள் அந்தச் சட்டத்தின்கீழ் யார் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் கந்துவட்டியால் பாதிக்கப்படுவோர்களின் நிலைமை அந்தோ பரிதாபம். கந்து வட்டி வாங்கியவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள், கந்துவட்டிக் கும்பல் கேட்ட வார்த்தைகள் மரணத்தைவிட அதிக வலியைக் கொடுத்திருக்கும்.  

கந்துவட்டித் தொடர்பான புகார்கள் சில நாள்களாகக் காவல்நிலையங்களின் வாசல்களைத் அதிகமாகத் தட்டத் தொடங்கியுள்ளன. கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்களின் செய்திகளும் மீடியாக்களில் அதிகமாக இடம்பெறுகின்றன. தனியார் தொலைக்காட்சிகளிலும் கந்துவட்டி விவாதிக்கப்படுகின்றன. கந்துவட்டியால் என் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளதாக சீரியல் துணை நடிகை ஆனந்தி, இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அவரிடம் பேசினோம்.  "என்னுடைய தந்தை ஆறுமுகத்தின் மருத்துவச் செலவுக்காக அம்மாவின் தங்கை ரங்கநாயகியிடம் கடந்த 2014-ம் ஆண்டில் 5 லட்சம் ரூபாய் வரை வட்டிக்கு வாங்கினேன். வட்டிப் பணத்தை மாதந்தோறும் செலுத்தினேன். கடந்த சில மாதங்களாக எனக்கு சீரியலில் வாய்ப்புக்கள் இல்லை. இதனால், பண நெருக்கடியால் சிரமப்பட்டேன். வட்டிக்குப் பணம் கொடுக்காததால் சித்தி ரங்கநாயகி மற்றும் அவரின் உறவினர்கள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் மன உளைச்சலுக்குத் தள்ளப்பட்டேன். இந்தச் சமயத்தில் ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்பிறகு, வேலூர் எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தேன். அங்கேயும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 

 சீரியல் துணை நடிகை ஆனந்தி

போலீஸில் புகார் கொடுத்ததால் எனக்கு மிரட்டல்கள் வந்தன. இந்தச் சமயத்தில் என்னிடமிருந்த செக்குகளைப் பிடுங்கி, அதில் 31 லட்சம் ரூபாய் தொகையை நிரப்பி வங்கியில் செலுத்தினர். பணமில்லாததால் செக் திரும்ப வந்தது. இதனால் வேலூர் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு நடந்துவருகிறது. 5 லட்சம் ரூபாய் கடனுக்கு 31 லட்சம் ரூபாய் என ஏமாற்றி, செக் மோசடி வழக்கு தொடர்ந்ததால் மன உளைச்சலுக்குத் தள்ளப்பட்டுள்ளேன். நான் மட்டுமல்ல, என்னுடைய குடும்பமே ரங்கநாயகி மற்றும் அவர் குடும்பத்தினரிடம் கந்துவட்டியால் சிக்கித் தவிக்கிறது. என்னுடைய சகோதரிகள் அனிதா, அனிஷியா ஆகியோரும் ரங்கநாயகியிடம் வட்டிக்குப் பணம் வாங்கியுள்ளனர். அவர்களுக்கும் ரங்கநாயகி நெருக்கடி கொடுத்துவருகிறார். 

இதற்கிடையில் என் அண்ணன் அருண்குமாரும் வட்டி டார்ச்சரால் பாதிக்கப்பட்டார். அவர், 2016, டிசம்பர் 19-ல் விபத்தில் சிக்கி இறந்தார். அவர் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது, ராணிப்பேட்டையில் உள்ள 60 லட்சம் மதிப்புள்ள வீட்டை அபகரிக்க ரங்கநாயகி முயற்சிசெய்து வருகிறார். என்னுடைய அம்மா சரசாவிடம் ரங்கநாயகி தரப்பு மிரட்டியுள்ளது. ஒட்டுமொத்த குடும்பமே சித்தியிடம் சிக்கித் தவித்துவருகிறது. என்னுடைய புகாருக்கு போலீஸார், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றார் கண்ணீருடன். 

வேலூர் போலீஸ் எஸ்.பி பகவலனிடம் பேசினோம். "நடிகை ஆனந்தி புகார் தொடர்பாக என்னுடைய கவனத்துக்கு எந்தத் தகவலும் வரவில்லை. ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் விசாரித்துவிட்டு போலீஸார் மீது தவறு இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் அவருடைய சித்தி ரங்கநாயகி மற்றும் குடும்பத்தினரிடம் போனில் பேச பலமுறை முயன்றோம். ஆனால், அவர்கள் யாரும் போனில் பதிலளிக்கவில்லை. அவர்கள் கருத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம். 


டிரெண்டிங் @ விகடன்