''வாழ்றோமோ இல்லையோ... வட்டி கட்டுறோம்!’’ வடசென்னையின் கந்துவட்டி கதை #EndKandhuVatti | The tears of the people of the North chennai due to kandhuVatti

வெளியிடப்பட்ட நேரம்: 21:44 (26/10/2017)

கடைசி தொடர்பு:21:44 (26/10/2017)

''வாழ்றோமோ இல்லையோ... வட்டி கட்டுறோம்!’’ வடசென்னையின் கந்துவட்டி கதை #EndKandhuVatti
                                              வட்டி தொழிலில் கொடிகட்டும் வடசென்னை

வட்டிக்குக் கடன் வாங்காமல் வடசென்னை மக்களின் வாழ்க்கைச் சக்கரம் ஒருநாளும் நகர்வதில்லை. இந்தப் பகுதியில் உள்ள மக்களை வட்டியின் பிடிக்குள் தள்ளிவிடும் சூழலும், வட்டிக்குக் கடன் கொடுக்கும் ஈட்டிக்கார ஆசாமிகளின் அணுகுமுறையும் கால்நூற்றாண்டு சரித்திரம். 

வடசென்னை பகுதியில் அதிகளவில் செயல்படும் சாலையோரப் பெட்டிக் கடைகளில் வட்டி வசூலிக்கும் காட்சிகளைத் தினந்தோறும் நாம் பார்க்கமுடியும். மடித்துக்கட்டிய வேட்டிக்குக் கீழே தெரியும் பட்டாபட்டி டிரவுசருடன் வரும் ஈட்டிக்கார ஆட்கள், "யோவ், சீக்கிரம்...பணத்தைக் கொடுய்யா. நாங்க அடுத்த வசூலுக்குப் போகணும்" என்று குரல் கொடுப்பதை அன்றாடம் பார்க்கலாம். அடுத்த நொடியே ஈட்டிக்கார ஆசாமியின் கைகளில் மிகச்சிறிய நோட்டு ஒன்றும், அதற்குள் மடிக்கப்பட்ட ஐம்பது ரூபாயும் கைமாறும். 'இது என்ன கணக்கு' என்கிறீர்களா? 100 ரூபாய் கடனை வார வட்டியாக வாங்கினால், வட்டி 10 ரூபாய். அதுவே ஐநூறு ரூபாய் என்றால், அதற்கு ஐம்பது ரூபாய் வட்டி. அதிகபட்சம் ஐந்தாயிரம் ரூபாய்வரை கொடுத்துவிட்டு வாரந்தோறும் வசூலிப்பார்கள். இப்படி வார வட்டிக்குப் பணம் வாங்கி கடையை நடத்துபவர்களே அதிகம். வாழைப்பழம், வெற்றிலை மற்றும் ஜூஸ் போடுவதற்கான திராட்சை உள்ளிட்ட பழங்கள் போன்ற அன்றாடம் விற்றுத்தீர்க்க வேண்டிய பொருள்களே இந்தக் கடைகளின் அதிக முதலீடு. இப்படிப்பட்ட பொருள்கள் விற்காமல் தேங்கி விட்டால், அந்த வாரத்தில் வட்டிப் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். அதுவே, கடைக்காரர்களுக்கும், வட்டி வசூல் செய்ய வருபவர்களுக்கும் தகராறாக மாறி, தற்கொலை அல்லது கொலையில் போய் முடியும் சம்பவங்களும் நிகழ்ந்ததுண்டு. அதுபோன்ற சமயங்களில், போலீஸில் புகார், விசாரணை, குற்ற நடவடிக்கை என்று தொடரும். கந்துவட்டி தடுப்புச் சட்டம் எல்லாம் அதன் பின்னால்தான் அணிவகுத்து நிற்கும்.

வட்டி வசூல் செய்பவர்கள், சிட்பண்ட் நிறுவனம் வழங்குவதுபோல ரசீதோ, கம்பெனி முகவரியுடன் கூடிய ஒப்புகைச் சீட்டோ கொடுப்பதில்லை. அவர்கள் கையில் எடுத்துவரும் அந்தச் சிறிய நோட்டில்தான் கடைகளில் வசூலிக்கும் பணத்தைக் குறித்துக் கொண்டுசெல்வார்கள். இதனால், ஆதாரம் ஏதுமில்லாத நிலையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. ஐந்தாயிரம் ரூபாய் கடனாக வாங்கும் ஒரு பெட்டிக்கடைக்காரர், தான் வாங்கிய அசல் தொகையைக் காட்டிலும் பல மடங்கு ரூபாயை வட்டியாகவே கொடுத்துவரும் சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

 


                                      வட்டியில் புரண்டாலும்  வடசென்னை இதுதான்( கொடுங்கையூர் குப்பைமேடு)

சிறு கடைகளில்தான் இதுபோன்ற அராஜக வட்டி வசூல் என்றில்லை. வடசென்னை பகுதிகளில் உள்ள வீடுகளிலும் இந்த வட்டி வசூல் வன்முறை உண்டு. சில பெண்களே, அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள பெண்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து, அதனை வசூலிப்பதும், அவர்களால் சீரழியும் குடும்பப் பெண்களின் கதையும் இன்னொரு பரிதாபம். 'டாஸ்மாக்கே' கதியென கிடக்கும் கணவனால், குடும்பம் நடத்துவதற்குத் தேவையான பணம் கிடைக்காமல், வேறு வழியில்லாமல் வட்டிக்குப் பணம் வாங்கும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பாதிக்கப்படும் பெண்ணுக்கு ஆறுதல் சொல்வது போன்று குடும்பத்துக்குள் நுழையும் சில பெண்கள், 'இதுக்காக நீ ஏன் அழுது கஷ்டப்படறே? இந்தா நூறு ரூபாய முதல்ல வாங்கிக்கோ. அரிசியை வாங்கி உலைய வை... பக்கத்து மில்லுல, பாலீஷ் பட்டறையில வேலைக்கு ஆளுங்க தேவை இருக்குதாம். அப்படியே பிரஸ்ல போனா பேப்பர் கட்ட, மடிக்கன்னு ஆளுங்க தேவைப்படுதுன்னு சொல்றாங்க. நீயே உழைச்சு பிள்ளைங்களைக் காப்பாத்தப் பாரு. இந்த நூறு ரூபாய்க்கு சனிக்கிழமை நீ கூலி வாங்கினதும் 10 ரூபாய் வட்டியாகக் கொடுத்தாப் போதும். மேற்கொண்டு பண்டிகை போன்று வேறசெலவு இருந்தாலும் என்னிடம் கேளு, நான் வாங்கிட்டு வந்து தர்றேன். என் காசு இல்ல. தெரிஞ்ச அண்ணன் வட்டிக்கு விடறாரு, நான் அங்கயிருந்து வாங்கி உனக்குக் கொடுக்கிறேன்" என்று தெரிவித்து, தொடர்ந்து அந்தப் பெண்களை வட்டிக்குப் பணம் வாங்கத் தூண்டுவதன் மூலம் வீடுகளுக்குள் நுழைந்து விடுகிறது வட்டி.

இப்படி மெள்ள, மெள்ள பெட்டிக்கடை, வீடுகளில் நுழைந்து வட்டிக்குப் பணம் கொடுப்போர், அடுத்ததாகக் குறிவைப்பது ஆட்டோ டிரைவர்களைத்தான். "தலைவரே, வண்டி மக்கர் பண்ணிடுச்சி, வண்டி ரிப்பேர் முடிந்து ரூட்ல போனதும் நானே உனக்குப் போன் பண்ணிட்டு வந்து குடுத்துடறேன். இப்பக் கோவிச்சுக்காம போய்ட்டு வா" என்று வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்க முடியாமல் வசூல் செய்ய வருபவர்களிடம் கெஞ்சும் ஆட்டோ டிரைவர்களை அதிகமாக இப்பகுதியில் பார்க்கலாம்.

பெட்டிக்கடைகள், வீடுகள், ஆட்டோ டிரைவர்கள் என்று தொடங்கி வட்டித் தொழில் ஓரளவு சூடுபிடித்ததும், சம்பந்தப்பட்டவர்கள் ஏதாவதொரு பெயரில் ஃபைனான்ஸ் கம்பெனியை ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களிடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்களின் பிள்ளைகளை, அந்த ஃபைனான்ஸ் கம்பெனிகளின் கைக்கூலிகளாக மாற்றி, தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு வட்டி வசூலிப்பதற்காக அனுப்பிவைக்கும் அவலநிலையும் உருவாகிறது. அதுதான் மிகப்பெரிய சோகம். 

வட்டி வசூலிப்பில் எந்தப் பிரச்னை வந்தாலும் அதை முறியடிக்கவும், தங்கள்மீது வழக்குகள் பாயாமல் இருக்கவும், காவல்துறை உள்பட அனைத்துத் துறைகளிலும் தங்களுக்குச் சாதகமான நபர்களை வட்டிக்குப் பணம் வழங்கும் நபர்கள், பிடித்து வைத்துக்கொண்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை, ஃபைனான்ஸ் கொடுப்பவர்கள், அவ்வப்போது வெயிட்டாக கவனித்து விடுவார்கள். இப்படியாக, குறிப்பிட்ட தெருக்களுக்கு தாதாக்கள்போல் அவர்கள் வலம் வருகிறார்கள்.

நம் நாட்டில் நடக்கும் கொலைகளில் 90 விழுக்காடு சம்பவங்கள், பணத்தைப் பின்னணியாகக் கொண்டவையே. அவற்றில் வட்டியால் பாதிக்கப்படுவோரும் சிக்கிக்கொள்வதுண்டு. கந்துவட்டிக் கொடுமைகள் அதிகரிப்பதற்கு இரண்டே விஷயங்கள்தான் அடிப்படைக் காரணம். அதனை ஒழிப்பதற்கான தீர்வும் இந்த அடிப்படையில் இருந்துதான் தொடங்குகிறது. முதலாவதாக, குடிகார ஆசாமிகளால் குடும்பத்தில் வறுமை. இதனால் வட்டிக்குப் பணம் வாங்கி குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் பெண்களின் பரிதாப நிலைமை. இரண்டாவதாக, கட்டட வேலை, ஸ்டீல் பட்டறை,  பிரிண்டிங் பிரஸ் போன்ற தொழில் நிறுவனங்களில் வாரத்தில் இரண்டு நாள்கள் மட்டுமே வேலை; மற்ற நாள்களில் வேலையில்லாததால், குடிப்பழக்கமே இல்லாத ஆசாமிகளும், வேலையில்லாத நாள்களில் குடும்பத்தேவைக்காக வட்டிக்குப் பணம் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் சூழல். 

இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டு, அவற்றிலிருந்து மீள்வதற்கு டாஸ்மாக் கடைகளுக்கு மூடுவிழா நடத்துவது முதல் தீர்வாகும். அடுத்ததாக, கடுமையான உழைப்பைக் கொடுத்தாலும், போதிய ஊதியம் இல்லாத நிறுவனங்களின் நிலையை மாற்றி, குறைந்தபட்ச, உத்தரவாத ஊதியம் அளிக்கக்கூடிய நிறுவனங்களை ஏற்படுத்தித் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும். இந்த இரண்டு தீர்வையும் தவிர, கல்வியின் பெருமை, மதுவின் கொடுமை போன்றவற்றை வலியுறுத்தும் வகையிலான விழிப்புஉணர்வு மையங்கள் அரசின் சார்பில் நாடு முழுவதும் உருவாக வேண்டும். அப்போதுதான் கந்துவட்டி மற்றும் மீட்டர் வட்டி போன்ற வட்டிக் கொடுமைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும். 

அனைத்தும் நல்லனவாய் முடிந்து, அனைவருக்கும் நல்லகாலம் பிறக்கும் என நம்புவோம்!

 


டிரெண்டிங் @ விகடன்