`விவசாயத்தை அழிக்க நினைக்காதீர்கள்’ அரசுக்கு எதிராகக் கொந்தளிக்கும் விவசாயச் சங்கம்

விவசாயிகளின் பொறுமைகளைச் சோதிக்காதீர்கள் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் காப்பீடு தொகையை முழுமையாக வழங்குங்கள் இல்லையேல் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்திருக்கிறார்கள் ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயச் சங்க மாநிலத் தலைவர் விஸ்வநாதன்.

                        


தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கக்கூட்டம் ஆண்டிமடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அரியலூர்  மாவட்ட செயலாளர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாநில தலைவர் விஸ்வநாதன் மைக்கைப் பிடித்தார். ``இந்த அரசுகள் விவசாயிகள் வாழ்க்கையை நசுக்கிக்கொண்டிருக்கிறது என்று ஆதங்கத்தோடு பேசத்தொடங்கினார். 

கடந்த ஓராண்டாகப் பருவமழை இல்லை. இதனால் முப்போகமாக இருந்த விவசாயம், ஒரு போகம்கூட செய்ய முடியாத நிலை உள்ளது. நடவு செய்த பயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் கருகிக் காய்ந்துவிட்டன. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, 2016-17-ம் ஆண்டு பயிர்க்கடனாக விவசாயிகளுக்கு ரூ.2,200 கோடி வழங்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார். இது முழு பொய். நடப்பாண்டு பயிர்க்கடனாகத் தமிழகத்தில் ஒரு கூட்டுறவு வங்கியிலும் ஒரு பைசாகூட கடன் வழங்கவில்லை என்பதுதான் உண்மை. தற்போது கூட்டுறவுத் துறையினர் கடந்தாண்டு பெற்ற கடனுக்கு 13 சதவிகித வட்டி விதித்ததோடு, அதில் மூன்றில் ஒருபங்கு தொகையை உடனே கட்ட வேண்டும் என்று விவசாயிகளை நிர்ப்பந்தப்படுத்தி வருகிறார்கள். வெந்த புண்ணியில் மேலும் வேலை பாய்ச்சாதீர்கள்.

கடந்தாண்டு காவிரி நீரின்றி, போதிய மழைநீரும் இன்றி பயிர்கள் கருகி, விவசாயிகள் மடிந்தது அரசுக்குத் தெரியாதா? கடந்தாண்டு கடனை எல்லாம் நிபந்தனை இல்லாமல் ரத்துசெய்து கடன் வழங்க வேண்டும் என்று பலமுறை அரசை வலியுறுத்தி வருகிறோம். பயிர்க் காப்பீட்டு நிறுவனங்கள் குளறுபடியால் விவசாயிகளுக்கு உரிய பயிர் காப்பீட்டு இழப்பீடு கிடைக்காமல் பாதித்துள்ளனர். அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவிகித இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். அதே போல் செங்கால் ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும். ஏரிகளின் வரத்து வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும். தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு பணம் நிலுவைத் தொகையை தமிழக அரசே பெற்று தர வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.4,000 என விலை அறிவிக்க வேண்டும். தமிழக அரசு அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு முந்திரிக் கன்று வழங்க வேண்டும். முந்திரிக்கொட்டைத் தொழிற்சாலை அமைக்கபடும் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. வடகிழக்குப் பருவமழை வரும் 26-ம் தேதியன்று தொடங்கும் என அரசு அறிவித்துள்ளது ஏரிகளில் தண்ணீர் நிரம்பவும், பயிர்களை அழிக்காமலும் பாதுகாக்க வேண்டும். ஆண்டிமடத்தில் ஒழுங்குமுறை விற்பனைகூடம் துவங்க வேண்டும். இந்த திட்டங்களை உடனே நிறைவேற்றுங்கள் இல்லையேல் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்தார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!