ஊரைக் காலி செய்யும் மணல் கொள்ளை: கொதித்தெழுந்த கிராம மக்கள்!

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கிராமம் பொட்டிபுரம். இங்கே கடந்த சில நாள்களாக உள்ளூர் அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் தொடர்ந்து மணல் அள்ளுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பல முறை அதிகாரிகளை முறையிட்ட போதும் எந்தவித பலனும் இல்லை. லாரிகள் கிராமத்திற்குள் வேகமாக வருவதால், வீட்டில் வளர்க்கப்படும் கோழி, ஆடு, நாய் போன்றவை அடிபட்டு இறக்கின்றன. சில நேரங்களில் கிராமத்தினரும் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மணல் லாரிகளை மறித்த கிராமத்தினர், இனி கிராமத்திற்குள் லாரிகள் வரக் கூடாது என்று கூறியிருக்கிறார்கள். அதன் பிறகு லாரிகள் ஊருக்குள் வரவில்லை. ஆனால், மணல் அள்ளப்படுவது தொடர்ந்துகொண்டிருந்தது. எந்த வழியாக லாரிகள் செல்கிறது என்று கிராமத்தினர் பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, விவசாய நிலங்களுக்கும், கிராமத்துக்கும் தண்ணீர் வரக்கூடிய ஓடையை மறித்து அதன்மீது மணலைக்கொட்டி பாதை அமைத்திருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் ஆவேசமடைந்த கிராம மக்களுக்கு ஆதரவாக பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி, லாரிகளையும், மணல் அள்ள பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றையும் முற்றுகையிட்டனர். அங்கிருந்த சிலரிடம் பேசும்போது, "தினமும் பல முறை மணல் ஏற்றிக்கொண்டு வேகமாகச் செல்கிறார்கள் என்றுதான் ஊருக்குள் வரக் கூடாது என்று சொன்னோம். ஆனால், இப்போது தண்ணீர் வரும் ஓடையை மறைத்து பாதை அமைத்திருக்கிறார்கள். தினமும் நூற்றுக்கணக்கான முறை லாரிகள் மணல் ஏற்றிக்கொண்டு செல்கின்றன.

சம்மந்தப்பட்ட இடத்தை நேரில் பார்த்தால் 20 அடி வரை மணல் அள்ளி எங்கள் பகுதியை பாலைவனம் ஆக்கிவிட்டார்கள். எல்லாம் இராசிங்காபுரம் அ.தி.மு.க பிரமுகரின் செயல்தான். அதனால்தான் நாங்கள் எத்தனைமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனளிக்காமல் போய்விட்டது. வேறு வழி இல்லாமல்தான் இங்கே முற்றுகை போராட்டம் நடத்துகிறோம்" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!