நெட்டிசன்களுக்கு கி.வீரமணி வைக்கும் கோரிக்கை!

இணைய வளர்ச்சியுடன் சேர்ந்து ’ட்ரோல்’ செய்யும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. மக்கள் அரசியல்வாதிகள் மீதான விமர்சனங்களை நேரடியாக ட்விட்டர், ஃபேஸ்புக்கில் வைக்க தொடங்கிவிட்டனர். முக்கியமாக ட்விட்டரில் ஹேஷ் டேக் மூலம் ஒட்டுமொத்த விமர்சனங்களையும் கொட்டுகின்றனர். நீட், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி என பா.ஜ.கவின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழகத்தில் பா.ஜ.க சார்பாக தமிழிசைதான் நெட்டிசன்களின் டார்கெட். அண்மையில் மெர்சல் விவகாரத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசையை சமூக வலைதளத்தில் வறுத்தெடுத்துவிட்டனர் நெட்டிசன்ஸ். இதனால் வருத்தமடைந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சமூக வலைதள எழுத்தாளர்களுக்கு கோரிக்கைவிடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,  தமிழ் மாநில பி.ஜே.பி. தலைவராக இருக்கக்கூடிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள், தான் இருக்கும் கட்சிக்கு ஏற்ப மதவாத அரசியல் கண்ணோட்டத்தில் அவ்வப்போது கருத்துகளைச் சொல்லி வருகிறார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மேல்ஜாதி ஆதிக்க மதவாத கட்சியில் தம்மை உட்படுத்திக் கொண்டதால், இடத்துக்கு ஏற்ப அவர் தெரிவித்துவரும் கருத்துகள் எதிர்விளைவைத்தான் தமிழ்நாட்டில் ஏற்படுத்தும் என்றாலும், அவருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் - பெண்ணொருவர் ஒரு கட்சியின் பொறுப்பாளராக இருக்கும் நிலையில், ஆபாசமாகவும், கொச்சைத்தனமாகவும் பதிவு செய்வது உகந்ததல்ல.

veeramani

பெண்ணுரிமைக்காகப்  பாடுபட்ட தலைவர் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் பெண்களை இழிவுபடுத்துவது ஏற்கத்தக்கதல்ல. பொதுவாழ்விற்குப் பெண்கள் வந்தால் இந்நிலைதான் என்ற நிலை உருவாகிவிடக் கூடாதல்லவா?

டாக்டர் தமிழிசை அவர்களும், எதையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற முறையில் அவசரத்தில் வார்த்தைகளை நிதானமின்றிப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!