வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (26/10/2017)

கடைசி தொடர்பு:10:40 (27/10/2017)

கழுத்தை இறுக்கிய புராஜெக்ட், பிரகாஷ் உயிரைப் பறித்ததா? - கவின் கலைக் கல்லூரி சோகம்

கவின் கல்லூரி

வின் கலைக் கல்லூரியில் சுடுமண் துறையில் (ceramic Department) இறுதியாண்டு படித்து வந்த பிரகாஷ் என்ற மாணவர் நேற்றிரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 'எனது சாவுக்கு துறைத்தலைவர் (HOD) மட்டுமே காரணம்' என்று நான்கு பக்கக் கடிதமும் எழுதி வைத்துவிட்டு அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார். ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கவின்கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர், கல்லூரி நிர்வாகம் மீது குற்றச்சாட்டு சுமத்திவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.தற்போது தற்கொலை செய்துகொண்ட மாணவர் பிரகாஷின் மரணத்துக்கு நியாயம் கேட்டும், சம்பந்தப்பட்ட துறைத்தலைவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் உள்ளிருப்பு போராட்டம்

வேலூர் மாவட்டம் அடுக்கும் பாறை என்ற ஊரைச் சேர்ந்த மாணவர் பிரகாஷ். இவர் எழும்பூரில் உள்ள கவின் கலை கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். சொந்த ஊரிலிருந்து ரயில் பயணமாக தினமும் கல்லூரி வந்துசென்றவர். கடந்த சில மாதங்களாகத் தன்னை துறைத்தலைவர் டார்ச்சர் செய்துவருகிறார் என்று சக மாணவர்களிடமும், பெற்றோரிடமும் கூறிவந்துள்ளார். இதனால், கடந்த சில வாரங்களாக இவர் கல்லூரிக்கும் வரவில்லை. இந்த நிலையில், நான்கு பக்கங்களில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, நேற்றிரவு தனது சொந்த ஊரான அடுக்கும் பாறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய கடிதத்தில் ....

மாணவர் பிரகாஷ்"பிரகாஷ் ஆகிய நான் என் பெற்றோராகிய உங்களுக்கு, என் சுய நினைவுடன் கடைசியாக எழுதிக்கொள்வது... கல்லூரியில் பிரச்னை நடந்த பிறகு, என்னை எல்லா விஷயங்களையும் மறந்து மறுபடியும் கல்லூரிக்குப் போகச் சொன்னீங்க. ஆனால், என்னால போக முடியல. ஏன் என்றால் காலேஜுக்கு போனாக்கூட வேஸ்ட்னு தோணுச்சி. எப்படியும் என்னால வொர்க் பண்ண முடியாது. அப்படியே பண்ணாலும் காலேஜ் முடிக்கும்போது என்னை சரியாய் முடிக்கவிடமாட்டார் H.O.D சார். ஏன்னா நான் பிரச்னை செய்து அவரை அவமானப்படுத்தியதாகக் கருதி கோபத்தின் வெளிப்பாடாய் மறைமுகமாக எனக்கு டார்ச்சர் வரும். அதனால் நானும் உங்களைத் திருப்திப்படுத்த காலேஜுக்குப் போவதாகச் சொல்லி வெளியிடங்களுக்குச் சென்றேன். முடிக்க வேண்டிய ட்ராயிங் வொர்க் (Drawing work) எல்லாம் முடித்தேன். இரண்டு வாரமாக இப்படியே போனது. இப்படியே எவ்வளவு நாள் தான் என்னால் இருக்க முடியும்? அதனால்தான் நான் சாக முடிவெடுத்தேன். இனி அந்த காலேஜுக்குப் போக முடியாதுன்னு சொல்ல தயக்கம் இருந்தது. ஏன் என்றால், இதுவரை என் படிப்புக்கு எந்த வகையிலும் நீங்கள் தடை செய்ததில்லை. உங்களுக்குப் பிள்ளையாக இருந்து நான் இனிமேலும் கஷ்டம் கொடுக்க விரும்பவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா, அம்மா. H.O.D ரவிகுமார் என்னை எந்த வொர்க்கையும் சரியாக செய்யவிடுவதில்லை. ஏதாவது திட்டுவது என்றால்கூட என்னை மையப்படுத்தியே கார்னர் பண்ணுவார். ஆரம்பத்தில் எனக்குப் புரியவில்லை. பிறகு என் சொந்த விஷயங்களில் தலையிட்டார். உதாரணம் மதரீதியாக என்னை ப்ரெய்ன் வாஷ் பண்ணினார். நீ இந்த கடவுளை கும்பிடக்கூடாது. நீ நல்லவன்னுதான் 2 வருஷம் பெஸ்ட் ஸ்டூடண்ட் அவார்டு கொடுத்தேன். நீ இப்படி பண்ணலாமா என்றார்? அவருடைய சொந்தக் கருத்துகளை என் கருத்துகளோடு திணிப்பார். எந்த சுதந்திரமும் இல்லை. இதனால் அதிக மன உளைச்சலுக்கு ஆளானேன். 

கண்தானம் செய்ய திட்டமிட்டுள்ளேன். எல்லோரும் அதற்கு  ஒத்துழையுங்கள். நான் மிகவும் திருப்தி அடைவேன்." - என்று எழுதியிருக்கிறார்.

குழந்தை சிற்பத்தை உருவாக்கும் பிரகாஷ்

குழந்தை சிற்பத்தை உருவாக்கும் பிரகாஷ்

இச்சம்பவத்தைத் தொடர்ந்து இன்று காலைமுதலே கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களிடம் பேசியபோது, "பிரகாஷ் செம டேலன்ட். அவன மாதிரி டேலன்ட் எங்கக் கல்லூரியில யாருமே கிடையாது. அதனால் தான் இரண்டாம் வருடம் மற்றும் மூன்றாம் வருடத்தில் கல்லூரியின் தலைசிறந்த மாணவன் விருதை அவனால் வாங்க முடிந்தது. நான்காம் ஆண்டான இந்த வருடமும் அந்த விருதை வாங்க தகுதியான ஒரே ஆள் அவன் மட்டும்தான். அநியாயமா அவன கொன்னுட்டாங்க. மூன்றாம் ஆண்டு படிக்கும்போது 'களிமண்ணால் ஆன ஹாலோ உருவ பிராஜக்ட் செய்யப்போறேன்'னு H.O.D கிட்ட சொன்னான். ஆனால், 'அந்த பிராஜக்டை யாராலும் செய்யமுடியாது. தேவையில்லாமல் செய்யாதே தோல்வியில் முடிந்துவிடும்' என்று சொன்னார். இவன் மீண்டும் மீண்டும் வற்புறுத்தவே H.O.D சம்மதித்தார். பின் அந்த பிராஜக்ட் தோல்வியில் முடிந்துபோனது. அதன்பிறகு இவனுக்கு அனுமதி அளிக்கவில்லை. பிரகாஷ் மீண்டும் H.O.D -யிடம் 'எனக்கு மற்றொரு முறை வாய்ப்பு தாருங்கள். எப்படியாவது முடித்துவிடுவேன்' என்று கூறினான். ஆனால், மறுத்துவிட்டனர். சரி என்று இவனும் அதை பாதியில் விட்டுவிட்டான். அதன் பிறகு நான்காம் ஆண்டு வந்தபிறகு 'அதே பிராஜக்டை மறுபடியும் செய்யப்போகிறேன்' என்று சொல்ல அதற்கு H.O.D மற்றும் கல்லூரி முதல்வர் சம்மதம் அளிக்கவில்லை. காரணம் அந்த பிராஜக்ட் செய்வது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும் பிரகாஷ் 'என்னால் வெற்றிகரமாக செய்யமுடியும் அனுமதி கொடுங்கள்' என்று கூறினான். அதற்கு கல்லூரி நிர்வாகம், 'எங்களிடம் போதிய மெட்டிரியல் இல்லை. உனக்கு அதை செய்ய அனுமதி இல்லை' என்று மறுத்துவிட்டனர். அதில் ஆரம்பித்ததுதான் பிரச்னை. அதன்பிறகு அவன் எது செய்தாலும் குறைகண்டுபிடித்து திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இதனால் கடந்தமாதம் அவன் பெற்றோரை அழைத்து வந்து முதல்வரிடம் முறையிட்டான். அதன்பின் கல்லூரிக்கு வரவில்லை. இப்போது இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டான். ஒரு நல்ல கலைஞனை வளரவிடமா, அது இல்ல.. இது இல்லன்னு சொல்லி அவன மட்டம் தட்டி மட்டம் தட்டி சாவடிச்சிட்டாங்க. இப்போ வந்து பிரகாஷ் மன நலம் பாதிக்கப்பட்டவன்னு எல்லார்கிட்டயும் சொல்லிக்கிட்டிருக்காங்க" என்றனர்.

கல்லூரியின் முதல்வர் மதியழகன்

கல்லூரியின் முதல்வர் மதியழகன்

இதுபற்றி கல்லூரி முதல்வர் மதியழகனிடம் பேசியபோது, "அந்த மாணவர் இரண்டு வருடம் தலைசிறந்த மாணவர் விருதை வாங்கியவர். நல்ல திறமைசாலி. ஆனால், சப்ஜெக்ட்டில் இல்லாத ஒரு பிராஜக்டை செய்யப்போவதாக H.O.D-யிடம் கூறியுள்ளார். அதற்கான மெட்டீரியலும் கல்லூரியில் இல்லை. அதனால் அந்த மாணவருக்கும், H.O.D-க்கும் பல முறை வாக்குவாதம் எழுந்துள்ளது.  இது சம்மந்தமாக அவர்களது பெற்றோரைக் கல்லூரிக்கு வரவழைத்து பேசிவிட்டேன். அந்த மாணவர் மன அழுத்தத்தில் இருந்ததால், அதற்குள் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்" என்றார்.

பிரகாஷின் துறைத்தலைவர் (H.O.D) ரவிகுமாரிடம் பேசியபோது, " நான் மதரீதியாக அந்த மாணவரிடம் பேசியதே இல்லை. மேலும் என் கருத்துகளை அவர் மீது நான் திணித்ததும் இல்லை. பாடம் சம்பந்தமாக ஒரு மாணவருக்கு அறிவுரை செய்வது ஒரு குற்றமா?" என்றார்.

வட்டமிடப்பட்டவர் துறைத்தலைவர் ரவிகுமார்

வட்டமிடப்பட்டவர் துறைத்தலைவர் ரவிகுமார்

பிரகாஷின் வகுப்பு நண்பர்களைச் சந்தித்துப் பேசியபோது, "பிரகாஷ் ரொம்ப திறமைசாலி. அவன் பண்ற ஒவ்வொரு வேலைப்பாடுகளும் அவ்வளவு தத்ரூபமாக இருக்கும். அவன் சொன்ன மாதிரி ஹாலோ பிராஜக்ட் செய்யறது அவ்வளவு ஈசி இல்ல. ஆனா அவன் செய்வேன்னு சொன்னான். கண்டிப்பா அவனால அத செய்யமுடியும். இதுக்கு மெட்டீரியல் காலேஜ்ல இல்லன்னு HOD மற்றும் முதல்வர் சொன்னார்கள். அதனால ஒரு மாசத்துக்கு முன்னாடி கிளாஸ்ல HOD-க்கும் பிரகாஷுக்கும் செம சண்டை. அப்போ பிரகாஷ் அவர்கிட்ட கோவமா நடந்துக்கிட்டான். அவரும்தான். ஆனா கடிதத்தில் சொன்னமாதிரி HOD இதுவரைக்கும் எந்த மாணவர்களிடத்திலும் மதத்தைப் பற்றியோ அல்லது தனிப்பட்ட கருத்து திணிப்போ செய்தது கிடையாது. ஆனா இப்படி ஒரு முடிவை எடுத்திட்டான். பொதுவா அவன் யாரோடும் நல்லா சிரிச்சிப் பேசமாட்டான். தனியாத்தான் இருப்பான். அவனுக்கு ரொம்பப் பிடிச்சது என்னன்னா அடிக்கடி குழந்தைகள் ஆசிரமத்துக்குப் போவான். அங்கிருக்குற குழந்தைங்ககூட நிறைய நேரம் செலவிடுவான். தனிமைல இருக்கும்போது படம் வரைவான். பிராஜக்ட் வொர்க் பண்ணுவான். ரொம்ப நல்ல பையன். எங்க எல்லாருக்குமே அவன ரொம்ப பிடிக்கும்" என்றார்கள் அழுதபடியே!

மாலையில் போலீசார் மாணவர்களின் கொடுத்த வாக்குறுதியின்படி, போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் ஒரு வார காலத்துக்குள் தற்கொலையோடு தொடர்புடையவர்களை பிடித்துவிடுவோம் என உறுதி அளித்து இருக்கின்றனர்.  

மாணவர் பிரகாஷ் உருவாக்கிய தத்ரூப சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை காண இந்த லிங்கை கிளிக் செய்க

 


டிரெண்டிங் @ விகடன்