வாக்கிங் போணுமா, பணம் கொடுக்கணும்!- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியம் அதிரடி

தஞ்சாவூரில் உள்ள அன்னை சத்யா ஸ்டேடியத்தில் தினமும் காலை, மாலை என இரு வேளைகளிலும் நூற்றுக்கணக்கானவர்கள் நடைபயிற்சி செல்கிறார்கள். இங்கு இவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் எனத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  

நடைபயிற்சி

மாதக் கட்டணமாக, பெரியவர்கள் 250 ரூபாயும், கல்லூரி மாணவர்கள் 150 ரூபாயும் பள்ளி மாணவர்கள் 100 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுகளை ஊக்கப்படுத்துவதற்காகவும் பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பொதுநோக்கத்துடனும்தான் மக்களின் வரிப்பணத்தில் இதுபோன்ற விளையாட்டு அரங்கங்களை அரசு அமைத்துள்ளது. இது லாப நோக்கத்துடன் செயல்படக்கூடிய வணிக நிறுவனமாக மாறிவிடக் கூடாது என எச்சரிக்கிறார்கள் இங்கு நடைப்பயிற்சி மேற்கொள்கிறவர்கள். தற்பொழுது சர்க்கரை வியாதி நோயாளிகள் அதிகரித்துவருகின்றனர். இவர்கள் ஸ்டேடியத்தில்தான் பாதுகாப்பாக நடைப்பயிற்சி செல்ல முடியும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டுகளில் ஈடுபட வாக்கிங் அவசியம். கட்டணம் வசூலித்தால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் இங்கு வாக்கிங் செல்வதைத் தவிர்க்கக்கூடும். இதெல்லாம் ஒருபுறமிருக்க, ஒரே மாதிரியான சீரான நடைப்பயிற்சி சாலை, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இங்கு செய்து தராத நிலையில் கட்டணம் நிர்ணயிப்பது நியாயமான செயல் அல்ல என ஆதங்கப்படுகிறார்கள் இங்கு நடைப்பயிற்சி செல்பவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!