வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (26/10/2017)

கடைசி தொடர்பு:07:58 (27/10/2017)

தங்கக் கவசம் விவகாரம்: வங்கி மேலாளருக்கு தினகரன் கடிதம்!

தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட வேண்டிய தங்கக் கவசத்தைக் கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவால் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பாளரிடமே அளிக்க வேண்டும் என்று கூறி மதுரை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைமை மேலாளருக்கு டி.டி.வி. தினகரன் கடிதம் எழுதியுள்ளார். 


பசும்பொன்னில் உள்ள தேவர் சிலைக்கு ஜயந்தி விழாவின்போது அணிவிக்கும் வகையில் ஜெயலலிதாவால் கடந்த 2014-ல் 13 கிலோ எடைகொண்ட தங்கக் கவசம் அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது. விழா முடிந்தபின்னர் அந்தக் கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளையின் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜயந்திவிழாவின்போது அ.தி.மு.க-வின் பொருளாளரும், தேவர் நினைவாலயத்தின் நிர்வாகியும் வங்கிக் கிளைக்கு நேரில் சென்று அந்த தங்கக் கவசத்தைப் பெற்றுச் செல்வது வழக்கம். இந்நிலையில், வரும் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு தங்கக் கவசத்தைப் பெறுவதற்காக வங்கிக்குச் சென்ற அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பொருளாளர் பதவி தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பது மற்றும் அ.தி.மு.க. உட்கட்சிப் பூசல் ஆகியவற்றைக் காரணமாகக் கொண்டு தங்கக் கவசத்தை வழங்க வங்கி நிர்வாகம் மறுத்ததாகத் தெரிகிறது. பசும்பொன் அறக்கட்டளை அறங்காவலர் காந்தி மீனாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், 27-ம் தேதிக்குள் தங்கக் கவசத்தைப் பாதுகாப்புடன் பசும்பொன் கொண்டு சென்று அவரிடம் ஒப்படைக்க வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட வேண்டிய தங்கக் கவசத்தை கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவால் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பாளரிடமே அளிக்க வேண்டும் என்று கூறி மதுரை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைமை மேலாளருக்கு  அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலா செயல்படுவதற்கும், அவரால் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் செயல்படவும் எந்தவிதத் தடையும் இதுவரை விதிக்கப்படவில்லை என்பதை தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, கட்சியின் அதிகாரபூர்வ முடிவுகளை எடுக்க சசிகலாவுக்கு எல்லாவிதமான அதிகாரங்களும் இருப்பதாக அந்தக் கடிதத்தில் தினகரன் மேலும் குறிப்பிட்டுள்ளார். எனவே, பொதுச்செயலாளர் சசிகலாவின் அறிவுரைப்படி தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட வேண்டிய தங்கக் கவசத்தை பசும்பொன் தேவர் நினைவாலயத்தின் நிர்வாகியிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்று தினகரன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.