எல்லா வியாதிகளுக்கும் வெப்ப நிலை பரிசோதிப்பது ஏன்?

உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரைப் பார்க்கப் போனாலே அவர் முதலில் என்ன செய்வார் சொல்லுங்கள் பார்ப்போம்?  முதலில் அவர் நம்முடைய உடல் வெப்பநிலையைத்தான் பரிசோதிப்பார். காய்ச்சல் என்றால் பரவாயில்லை, வயிற்று வலி, தலைவலி, வாந்தி, மயக்கம் என எல்லா நோய்க்கும் இப்படி வெப்ப நிலை பரிசோதிப்பது ஏன்? 

வெப்ப நிலை

இயற்கையிலேயே ஒருவரின் உடல் வெப்பம் என்பது உடலின் ஆரோக்கியத்தைக் காட்டும் அறிகுறியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதிகமான வெப்பமோ, குறைவான வெப்பமோ உடல் அசாதாரணமான நிலையில் இருப்பதைக் காட்டிவிடும். பொதுவாக ஒருவரின் உடல் வெப்பநிலை 98.4 பாரன்ஹீட் இருக்க வேண்டும். எனினும் சூழலின் காரணமாக உடலின் வெப்பம் நேரத்துக்கு நேரம் மாறிக்கொண்டே இருப்பதால், 98.1 பாரன்ஹீட் முதல் 99.0 பாரன்ஹீட் வரை உள்ள உடல் வெப்பம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. உணவுக்குப் பிறகு, உடற்பயிற்சிக்குப் பிறகு, வெயிலில் அலைந்தபிறகு எல்லாம் உடலின் வெப்ப நிலை உயரலாம். அதுபோல பல்வேறு காரணங்களால் உடல் வெப்பநிலை குறையவும் செய்யலாம். பெரும்பாலும் மூளையின் மத்தியப்பகுதியால் உடலின் வெப்பக் கட்டுப்பாடு செயல்படுத்தப்படுகிறது. 

ஒருவரின் உடலின் வெப்பநிலை அதிகமாவது என்பது நச்சுக்கிருமிகள், தொற்றுக்கிருமிகள் தாக்கியதால் அடையாளமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. எனவே, உடலின் வெப்பநிலை மாறினால் கட்டாயம் ஏதோ உடல்நலக் கோளாறு உண்டாகி உள்ளது என்றே அர்த்தம். கடுமையான வெப்பத்தினால்தான் அதிகமான பாதிப்புகளை உடல் சந்திக்கிறது. 100.5 பாரன்ஹீட் என்ற அளவை உடல் பெறும்போது அது காய்ச்சல் என கருதப்படுகிறது. உண்மையில் காய்ச்சலின்போது வெப்பநிலை அதிகரிப்பதே உடலில் புகுந்துள்ள கிருமிகளை அழிப்பதற்காகத்தான். உடலின் வெப்பமே ஆரோக்கியத்தின் கவசமாக இருந்துவருகிறது என்பதே உண்மை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!